திருவாரூர்: தலைக்கேறிய போதை.. சமாதானம் பேச குறுக்கே வந்த சித்தப்பா அடித்துக்கொலை!
மது போதையில் இருந்த பிரபாகரன் எங்கள் குடும்ப பிரச்னையில் தலையிடுவதற்கு நீ யார் என அவருடைய சித்தப்பா குமாரை தாக்கியுள்ளார்.
திருவாரூரில் மதுபோதையில் உறவினரை கொலை செய்த நபரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.
மதுவால் தனக்கு மட்டுமின்றி பிறருக்கும் தீங்கு ஏற்படும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மது போதையினால் ஏற்படும் மரணங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக மதுபோதையில் கொலை சம்பவத்தில் ஈடுபடுவது வழிப்பறியில் ஈடுபடுவது மதுபோதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி மற்றவரின் உயிருக்கு ஊறு விளைவிப்பது என மதுவால் பல்வேறு மரணங்கள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் வன்முறையில் ஈடுபடுவதுடன் உறவினர்கள்,பெற்ற தாய் தந்தை என பார்க்காமல் கூட மதுபோதையில் கொலை செய்து விடும் சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.
அந்தவகையில் திருவாரூரில் தனது சொந்த சித்தப்பாவையே மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொலை செய்திருக்கிறார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மேலப்பாலையூர் ரைஸ்மில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய தந்தை ஜெயபால். இந்த நிலையில் பிரபாகரனுக்கும் அவருடைய தந்தை ஜெயபாலுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த பொழுது பிரபாகரனின் சித்தப்பா குமார் அவர்களை சமாதானம் செய்துள்ளார். இந்த நிலையில் கடுமையான மது போதையில் இருந்த பிரபாகரன் எங்கள் குடும்ப பிரச்சனையில் தலையிடுவதற்கு நீ யார் என அவருடைய சித்தப்பாவான குமாரை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த குமாரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.அதனை அடுத்து குமாரின் மனைவி பேபி குடவாசல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
குமாரின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் மேலப்பாலையூர் கிராமத்தில் மதுபோதையில் இருந்த பிரபாகரனை குடவாசல் காவல்துறையினர் கைது செய்து அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த குமாரின் உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் தனது சித்தப்பாவை கொலை செய்த சம்பவம் மேலப்பாலையூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து மதுபோதையில் நடக்கும் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மதுவால் தனக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படும் தீங்குகள் குறித்தும் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்குவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட விழிப்புணர்வையும் பொது மக்களுக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.