இடம் தேடும் பணியில் பரபரப்பாக இயங்கும; தவெக நிர்வாகிகள்... எதற்காக?
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டமோ, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியோ நடத்திட வேண்டும்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வரும் மார்ச் மாதம் 2வது வாரத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை திருச்சியில் தொடங்கி அரியலூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தினார். கரூரில் நடந்த சம்பவத்திற்கு பின்னர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தமிழக வெற்றிக்கழகம் நடத்தவில்லை. பின்னர் ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் மற்றும் வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஆகியவை மட்டுமே நடத்தப்பட்டன.
இதற்கிடையில் மற்ற மாவட்டங்களிலும் இதேபோல் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு இயக்கம் அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் போன்று நடத்தப்பட உள்ளதாம். தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் இதுபோன்ற பொதுக்கூட்டமோ, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியோ நடத்திட வேண்டும் என்று தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் வரும் மார்ச் 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ:ச்சி அல்லது நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தஞ்சை மாவட்ட தலைவர் விஜய்சரவணன் கூறுகையில், தலைவர் விஜய் மார்ச் மாதம் தஞ்சை மாவட்டத்தில் நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2-வது வாரத்தில் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அல்லது பொதுக்கூட்டம் அல்லது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் தொடங்கி நாகை சாலையில் தஞ்சை மாவட்டம் முடியும் வரையும், மறுபுறம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரையும் இதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இடம் தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இடத்தை தேர்வு செய்த பின்னர் போலீசாரிடமும் முறையாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக இருந்தாலும் அது பொதுக்கூட்டம் போன்று பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். இதனால் பெரிய அளவில் இடத்தை தேடும் பணிகளில் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் களம் இறங்கி உள்ளனர். போக்குவரத்து வசதியும் இருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் உள் அடங்கிய பகுதியாக தேடும் பணிகளில் தவெக நிர்வாகிகள் இறங்கி உள்ளனர்.























