நள்ளிரவில் பைக் மீது மோதல்... தப்பித்து ஓடிய மினி பஸ் டிரைவர் ஏரியில் மூழ்கி பலி
தஞ்சாவூரில் இருந்து களக்குடிக்கு 2 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் இரவில் புலவர்நத்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்படுவது வழக்கமாம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பைக் மீது மோதியதால் அச்சமடைந்து சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிய மினி பஸ் டிரைவர் சமுத்திரம் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் நேற்று மதியம் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக மிதந்த அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த வாலிபர் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து களக்குடிக்கு 2 மினிபஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் இரவில் புலவர்நத்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தப்படுவது வழக்கமாம். இந்நிலையில் 25ம் தேதி இரவு புலவர்நத்தம் பெட்ரோல் பங்கில் நிறுத்தப்பட்டு இருந்த மினி பஸ்சை டிரைவர் பாபநாசம் அருகே கோவில்தேவராயன் பேட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் பிரதீப் (26) என்பவர் பஞ்சர் ஒட்டுவதற்காக தஞ்சை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.
அவருடன் நடத்துனர் புலவர்நத்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் ராஜ்குமார் (26), மற்றொரு டிரைவர் கலியபெருமாள் என்பவரின் மகன் விநாயகம் (27) ஆகியோரும் அதே பஸ்சில் வந்தனர். மாரியம்மன்கோவில் அருகே ஞானம் நகர் பகுதியில் வந்தபோது எதிரில் பைக்கில் வந்த ஒருவர் மீது பிரதீப் ஓட்டி வந்த மினி பஸ் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கி விட்டது.
பைக்கில் வந்தவர் இறந்து விட்டதாக நினைத்து பிரதீப் உட்பட 3 பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடியுள்ளனர். இதில் பிரதீப் சில தெருக்கள் பகுதியில் ஓடி சமுத்திரம் ஏரியில் இறங்கியுள்ளார். அந்த பகுதியில் சேறும், சகதியுமாக இருந்ததால் பிரதீப் நீரில் மூழ்கி விட்டார். மற்ற இருவரும் வெவ்வேறு பகுதியில் ஓடியதால் பிரதீப் ஏரியில் மூழ்கியது குறித்து தெரியவில்லை.
இந்நிலையில் நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறி இறந்த பிரதீப்பின் உடல் நேற்று மதியத்திற்கு மேல் நீரில் மிதந்துள்ளது. மினிபஸ் ஏற்படுத்திய விபத்தில் சிக்கிய பைக்கை ஓட்டி வந்தவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார். ஆனால் இது தெரியாமல் 3 பேரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிக்க ஓடியதால் பிரதீப்பிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பிரதீப்பின் அண்ணன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.























