Thanjavur: சாதனை மேல் சாதனை... கபடியில் வீர நடை போடு ஒரத்தநாடு மகளிர் பள்ளி மாணவிகள்
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி... என்றார் பாரதி. திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும்.
தஞ்சாவூர்: 'எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி’ என்றார் பாரதி. திடமான நம்பிக்கையுடன் திறமையும், முயற்சியும் கைகோர்க்கின்றபோது வெற்றி வசப்பட்டு விடும். அந்த வெற்றி உயரத்திற்கு கொண்டு செல்லும். ஆனால் உயரம் கண்டு மயங்காமல் உணர்வை கண்டு மேலும் மேலும் முயற்சிக்கும் போது தடைகள் நொறுங்கும்.
இலக்கு என்பது மலைத்து நிற்பதற்கு அல்ல. முயற்சி செய்து பெறுவதற்கு. இப்படி காலத்தின் வேகத்தில் வெற்றியை சாதனையாக்கி கம்பீரமாக நிற்கின்றனர் ஒரத்தநாடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த கபடி அணி மாணவிகள். வானமே எல்லையா யார் கூறியது. வானமும் எங்கள் வசம் என்று அதையும் தாண்டி வெற்றிக் கொடியை பறக்க விடும் முனைப்புடன் உற்சாகத்துடன் விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி வீர நடை போடுகின்றனர் இந்த வெற்றி மாணவிகள்.
இப்பள்ளியில் கல்வி மட்டுமல்ல சிறந்த விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கும் ஒப்பற்ற இடமாக திகழ்கிறது. படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாக கொண்டு இப்பள்ளி மாணவிகள் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
அந்த வகையில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் வெண்ணிலா, உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார் ஆகியோர் இப்பள்ளி மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான அனைத்து விதமான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றனர். இவர்களின் மேற்பார்வையில் பள்ளி மாணவிகள் போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை குவித்து பள்ளிக்கு பெருமையை சேர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவிகள் எழிலரசி, சாரா ஸ்ரீ, மௌனிகா, ஓவியா, அபர்ணா, பிரியங்கா, அசுமதாசன், பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் ஐஸ்வர்யா, இளங்கனி, சுருதிகா, சரிதா, அருள்செல்வி ஆகியோர் அடங்கிய கபடி அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்து சான்றிதழ்களையும், விருதுகளையும் பெற்று அசத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற இப்பள்ளி மாணவிகள் கோப்பையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். இந்த வெற்றி சாதாரணமாக கிடைத்தது அல்ல பல போட்டிகளில் வெற்றிப்பெற்று விடாமுயற்சியை தளர விடாமல் சாதித்ததால் கிடைத்தது என்றால் மிகையில்லை. படிப்பிலும் கெட்டி, விளையாட்டிலும் வெற்றி என்று வலிமையான மாணவிகள் நாங்கள் என்று வெற்றிக்கொப்பைகளை அள்ளி வருகின்றனர்.
தங்கள் பள்ளி கபடி அணி மாணவிகளின் வெற்றி குறித்து பள்ளி தலைமை ஆசிரியை அனுராதா கூறுகையில், “10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தொடர்ந்து அதாவது 10 ஆண்டுகளாக 95 சதவீதத்திற்கு மேல் எங்கள் பள்ளி மாணவிகள் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இப்பள்ளி மாணவிகள் விளையாட்டில் மாநிலம் மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். விளையாட்டு துறையின் மூலமாக ரயில்வே, தபால் தந்தித் து, காவல் துறையில் எண்ணற்ற மாணவிகள் வேலை வாய்ப்பு பெற்று பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் ஒன்றாகும். எங்கள் பள்ளியில் கபடி, கால்பந்து, எறிபந்து, கோகோ, வளையப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே போன்ற விளையாட்டு போட்டிகளில் மாணவிகள் பங்கு பெற்று வெற்றி பெற்று வருகின்றனர்” என்றார்.
இம்மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது கனி, பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் முன்னாள் மாணவிகள் பாராட்டினர்.