(Source: ECI | ABP NEWS)
வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டுமா... உருட்டிகிட்டு கீழே விழ வேண்டுமா?: தினமும் ஒரே இம்சை.. புலம்பும் தஞ்சை மக்கள்
தினம், தினம் இந்த தரைமட்ட பாலத்தை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் போது சிரமத்துடனேயே சென்று வருகின்றனர்.

தஞ்சாவூர்: நாங்க இந்த பகுதியில் வாகனம் ஓட்டிட்டு போகணுமா அல்லது உருட்டிகிட்டு கீழே விழணுமா என்று கேள்வி எழுப்புகின்றனர் தஞ்சை மக்கள். எதற்காக தெரியுமா?
தஞ்சை மேல அலங்கம் பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது அமைக்கப்பட்ட தரைமட்ட பாலம் சாலையில் இருந்து 1 அடி உயரத்துக்கு மேல் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டன.
குறிப்பாக மேலவீதி, பழைய பஸ் நிலையம் பகுதி, தெற்குவீதி, வடக்கு வீதி, கீழராஜவீதி, கொடிமரத்து மூலை, ரயிலடி, மகர்நோன்புச்சாவடி, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கட்டப்பட்டன. மழை காலங்களில் பெய்யும் மழைநீர் இந்த வடிகால் வழியாக சென்று நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில் இந்த வாய்க்கால்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் செல்லும் பகுதிகளில் சாலை சந்திப்புகளில் எளிதாக செல்லும் வகையில் தரைமட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் தஞ்சை மேலஅலங்கம் பகுதியில் உள்ள முருகன்கோயில் முன்பும் தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளன. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் இந்த தரைமட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் சாலையில் இருந்து ஒரு அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. இதனால் இதனை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 3 சாலையில் எந்த சாலையில் இருந்து வந்தாலும் தரைமட்ட பாலத்தில் ஏறி இறங்குவதற்குள் வாகனமும் சேதம் அடையும் நிலை தான் உள்ளது.
தரைமட்ட பாலத்தில் எளிதாக செல்லும் வகையில் சாலை உயர்த்தப்படாமலும் உள்ளது. இதனால் வாகன ஓட்டுனர்கள் பாலத்தின் ஒரு ஒரத்தில் வாகனங்களில் செல்கின்றனர். இது தவிர கார், ஆட்டோ போன்ற வாகனங்களும் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றன.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், மழைநீர் வடிகால் வாய்க்காலில் கட்டப்பட்ட தரைமட்ட பாலம் சாலையில் இருந்து 1 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை உயர்த்தப்படவில்லை. இந்த வழியாகத்தான் மேலவீதி, அரண்மனை வளாகத்தில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகிறார்கள். அவர்கள் இந்த தரைமட்ட பாலம் உள்ள பகுதிக்கு வரும் போது இறங்கி சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும் நிலை தான் காணப்படுகிறது.
பாலம் உயர்த்தி கட்டப்பட்ட போதும் இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தினம், தினம் இந்த தரைமட்ட பாலத்தை வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்து செல்லும் போது சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக இதனை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் சிறப்பான முறையில் அமைய வேண்டும். ஆனால் சாலையை உயர்த்தாமல் தரைமட்ட பாலத்தை மற்றும் உயர்த்தி சரி செய்தால் வாகனங்கள் எவ்வாறு சென்று வர முடியும். இதை இனியாவது உணர்வு உடனடியாக சாலையை உயர்த்தி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





















