முகவர்கள் குரூப் இன்சூரன்ஸ் வயதை உயர்த்த வேண்டும்... லியாபியின் மாபெரும் தர்ணா போராட்டம்
அகில இந்திய லியாபியின் கோட்ட முகவர்கள் சார்பில் முகவர் குரூப் இன்சூரன்ஸ் வயதை உயர்த்த வேண்டும். பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தர்ணா நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மைய பகுதியான இரு இடங்களில் இன்று தர்ணா போராட்டங்கள் நடந்தது. முதல் தர்ணா போராட்டம் லியாபி எனப்படும் அகில இந்திய லைப் இன்சூரன்ஸ் முகவர்கள் அமைப்பின் கோரிக்கை தர்ணா போராட்டம், மற்றொன்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினரின் தர்ணா போராட்டம்தான்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய லியாபியின் கோட்ட முகவர்கள் சார்பில் முகவர் குரூப் இன்சூரன்ஸ் வயதை உயர்த்த வேண்டும். பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
லியாபி தஞ்சை கோட்ட பொதுச் செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார். தஞ்சை கோட்ட தலைவர் வி. செல்வகணேசன் தலைமை வகித்தார். அகில இந்திய செயற்குழு உறுப்பினர் பி.கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தென் மண்டல லியாபி பொருளாளர் கே.முரளி, எல்ஐசி ஊழியர்கள் சங்க தஞ்சை கோட்ட தலைவர் எஸ். செல்வராஜ், எஸ்ஆர்எம்யூ திருச்சி துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன், தமிழ்நாடு பிஎஸ்என்எல் எஸ்.ஈ.டபுள்யூ.ஏ. மாநில தலைவர் சி.எம்.முருகையன், எஸ்.ஆர்.எம்.யு.தஞ்சாவூர் கிளை செயலாளர் பி.வேலு, போக்குவரத்து ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட ஆலோசகர் கே.சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
தர்ணா போராட்டத்தில் முகவர் குரூப் இன்சூரன்ஸ் வயதை உயர்த்த வேண்டும். பாலிசிகளுக்கான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். முகவர் கமிஷன் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும் பாலிசிதாரர் போனஸ் தொகை உயர்த்திக் கொடுக்க வேண்டும். பாலிசிக்கான நுழைவு வயதை உயர்த்த வேண்டும். கிளாபேக் முகவர் விரோத சரத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. லியாபி தஞ்சை கோட்ட பொருளாளர் எஸ் ரஜினிகாந்த் நன்றி கூறினார். இதில் திரளான எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கோவிந்தராஜு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்மணி விளக்க உரையாற்றினார். போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு பாஸ்கரன் வரவேற்றார். மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி தொடக்க உரையாற்றினார்.
இந்தப் போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . 70 வயது அடைந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் . குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்தி காசில்லா மருத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, போக்குவரத்து துறை ஓய்வூதியர் நல அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு மின்வாரிய ஒய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட தலைவர் மணிவண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, டி.ஆர்.பி.யூ கோட்ட உதவி தலைவர் கண்ணன், ஏ.ஐ.ஐ.பி.ஏ கோட்ட தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபாலன் நிறைவு உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.