Trump Zelenskyy: ”நோபல் பரிசு பார்சல்” பாதுகாப்பு கொடுக்குறோம்.. புதின் - ஜெலன்ஸ்கி மீட்டிங் போட்றோம் - ட்ரம்ப் உறுதி
Trump Zelenskyy: உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்கள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump Zelenskyy: உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் நிறுத்தத்திற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் உயர்மட்ட சந்திப்பு:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களையும் ஒரே அடியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று இரவு வெள்ளை மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவதற்கான மிக முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. அப்போது பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா ஆதரிக்கும்” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
”ஜெலன்ஸ்கி - புதின் சந்திப்பு”
உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ட்ரம்ப் பேசினார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், “சந்திப்பின் முடிவில் நான் புதினை தொடர்புகொண்டு பேசினேன். அவருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையேயான சந்திப்பிற்கான பணிகளை நன் தொடங்கினேன். இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பதை விரைவில் தீர்மானிப்போம். இந்த சந்திப்பில் நானும் இடம்பெறுவேன். உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுறுவதற்கான வாய்ப்புகளை கண்டு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பிற்கு உத்தரவாதம்:
ரஷ்யா உடனான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார். நாடோவில் இணையும் உக்ரைனின் விருப்பத்திற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தாலும், மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஏற்றுள்ளது. இந்த முடிவை அமெரிக்காவும் ஆதரிக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், “இந்த போரால் முழு உலகமும் இதனால் சோர்வடைந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். நான் ஆறு போர்களை முடித்துவிட்டேன், ஒருவேளை இது எளிதான ஒன்றாக இருக்கலாம் என்று நினைத்தேன். அது எளிதான ஒன்றல்ல. இது கடினமான ஒன்று” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி நம்பிக்கை
புதின் - ட்ரம்ப் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு முதன்முறையாக ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு வந்து ஐரோப்பிய தலைவர்களுடன் சேர்ந்து ட்ரம்ப் சந்தித்தார். இதுபோக தனிப்பட்ட முறையிலும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து, “சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. கொலைகளை நிறுத்தி இந்தப் போரை நிறுத்த அதிபர் ட்ரம்பின் முயற்சிகள், தனிப்பட்ட முயற்சிகளுக்கு மிக்க நன்றி. உக்ரைனைச் சுற்றியுள்ள அனைத்து கூட்டாளிகளும் எங்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அவர்களுக்கு நன்றி. நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்த போரை நிறுத்த வேண்டும், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர வழியை உருவாக்க வேண்டும் என்ற ட்ரம்பின் யோசனையை நாங்கள் ஆதரித்தோம். இதனிடையே, உக்ரைன் மற்றும் ரஷ்யா போரில் நியாயமான மற்றும் அமைதியான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.





















