மாற்றி யோசிச்சா... மகத்தான வசூல் எடுக்கலாம்: இளம் விவசாயியின் அசத்தல் சாகுபடி
நெல் சாகுபடியை மட்டும் செய்து கொண்டு இருந்த நிலை மாறி தற்போது விவசாயிகள் மாற்றி யோசிச்சு பல்வேறு சாகுபடிகளை செய்து அசத்தல் வருமானம் பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர்: மாற்றி யோசிச்சா... மகத்தான வசூல் எடுக்கலாம் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெண்டைக்காய் சாகுபடி செய்து அசத்தல் வருமானம் பெற்று வருகிறார் தஞ்சை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி.
மாற்றி யோசிச்சா... மகத்தான வசூல்
நெல் சாகுபடியை மட்டும் செய்து கொண்டு இருந்த நிலை மாறி தற்போது விவசாயிகள் மாற்றி யோசிச்சு பல்வேறு சாகுபடிகளை செய்து அசத்தல் வருமானம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி சத்தியமூர்த்தி தான் உற்பத்தி செய்யும் வெண்டைக்காயை தானே அறுவடை செய்து தானே விற்பனையும் செய்து அருமையான லாபம் பார்த்து வருகிறார். அவர் கூறியதில் இருந்து...
அப்பா நெல் சாகுபடிதான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. மொத்தம் 7 ஏக்கரில் சாகுபடி செய்வோம். நெல்லை பொறுத்தவரைக்கும் லாபம்ன்னு பெரிசா எடுக்க முடியாது. அப்புறமா நான் மாற்றுப்பயிர் செய்யலாம்னு யோசிச்சேன். நெல் சாகுபடியோடு சேர்த்து செய்யறதுன்னு முடிவு செஞ்சேன். தினமும் வருமானம் கிடைக்கறது போல சாகுபடி எதுன்னு விசாரிச்சப்போ வெண்டைக்காய் சாகுபடி பற்றி விபரங்கள் கிடைச்சுச்சு. இதை பற்றி நல்லா தெரிஞ்சுக்கிட்டு வெண்டைக்காய் விவசாயத்தில இறங்கினேன். இப்போ வெண்டைக்காய், கத்திரிக்காய், உளுந்து, நிலக்கடலை, நெல் என்று 7 ஏக்கர் அளவுல செய்துக்கிட்டு இருக்கேன். இப்போ மிளகாய் சாகுபடியும் செய்ய தீர்மானம் செய்து இருக்கேன்.
குறுகிய காலப்பயிரில் தினமும் வருமானம்
காய்கறிகளில் முக்கியமான பயிர்ன்னா வெண்டைக்காய்தான். இது குறுகிய காலப் பயிராகும். முதல் அறுவடைக்கு வந்தபின்னாடி தொடர்ச்சியாக இதிலிருந்து குறிப்பிட்ட காலத்திற்கு வெண்டைக்காயை எடுத்துக்கிட்டே இருக்கலாம். நல்லா பராமரிச்சா வருமானத்தை அள்ளிடலாம். நடவு செய்த 45 முதல் 50 நாட்களுக்குள்ளாக வருமானம் தரக்கூடியது இது. வெண்டைச் செடியில் நிறைய நோய்த்தாக்குதல் மற்றும் பூச்சித்தாக்குதல் பிரச்சனைகள் இருக்கு. வேர் அழுகல் நோய் பிரச்சனைகளும் உண்டு. முறையாக மேலாண்மை செய்து நல்ல விளைச்சலைப் பெற முடியும்.
சாகுபடி முறைகள் இப்படித்தான்
வெண்டைச் செடி சாகுபடியில் முதலில் மண்ணை நல்ல முறையில் பதப்படுத்தணும். மண்ணை உழுது தயார் செய்வதற்கு முன்னதாக இயற்கை உரங்களான ஆடு, மாடு கழிவுகளை நன்கு மக்க வைத்து நிலத்தில் பரப்பி பின் புழுதி பறக்க உழவு செய்யணும். வெண்டைச் செடிகளுக்கு சமமான நிலத்தை விட பாத்தி அமைத்து விதை நடவு செய்யும்போது அதன் விளைச்சல் அதிகமாக கிடைக்கும்.
கோடைக்காலத்தில் விதைக்கும்போது பாத்தி வேண்டாம். ஆனால் மழைக்காலத்துல அவசியமாக பாத்தி அமைக்கணும். அடுத்து விதைகள் தேர்வு செய்வது அவசியம். காரணம் நல்ல குறுகிய காலத்தில் நோய்களுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற ரகங்களாக வளர்ப்பது அவசியம். நல்ல தரமான விதையாக தேர்வு செய்யணும்.
விதைப்பது எப்படி என்று தெரிஞ்சுக்கோங்க
அதிகபட்சமாக ஒரு ஏக்கர் நிலத்திற்கு முக்கால் கிலோ விதைகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு விதைகள் வீதம் விதைக்கணும். செடிகள் ஓரளவு வளர்ந்தபிறகு இரண்டு செடிகளில் எந்த செடியில் முளைப்புத் திறனும் வளர்ச்சியும் இருக்கிறதோ அதை வைத்துக்கொண்டு மற்றொன்றை நீக்கி விட வேண்டும். சோலார் பேனல் வைச்சிருக்கேன். மின் மோட்டாரும் இருக்கு. தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
செடி முளைக்க ஆரம்பித்தவுடன் ஆரம்பத்தில் இலைப்புழுக்கள் வந்து தாக்கும். பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தணும்னா ஆரம்பத்திலேயே நல்லா தொழு உரம் அடித்து வயலை உழுது இருக்கணும். பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்த இயற்கை முறையில் மருந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். வேப்பம்புண்ணாக்கு கரைசல் இருந்தாலே போதும். 15 நாள் அல்லது 20 நாள்களில் பூக்க ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் செடி பூக்க ஆரம்பித்தவுடன் வண்டுகள் பாதிப்பும் இருக்கும். முறையாக மேலாண்மை செஞ்சா இதையும் கட்டுப்படுத்தலாம்.
பூச்சி தாக்குதல் இருக்கும்... அதுக்கு இதுபோதும்
வெண்டையில் மாவுப் பூச்சித் தாக்குதல் மிக அதிகமாக இருக்கும். இதுக்கு வேப்பம் கரைசல்தான் சரியானதாக இருதுக்கும். இல்லையா இஞ்சி, பூண்டு, மிளகாய் கரைசலைப் பயன்படுத்தி வெகுவாகக் கட்டுப்படுத்தலாம். நல்ல தழைச்சத்து மற்றும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்கள் அடங்கிய உரங்களை முறையான இடைவெளிகளில் கொடுத்து வரணும். இந்த உரங்களை எடுத்துக்கொண்டு வெண்டை செடி நன்கு வளர 25 முதல் 30 நாள்கள் ஆகும். பூக்கும் நேரங்களில் அதிக அளவு பூச்சித் தாக்குதல் இருக்கும். அசுவினிப் பூச்சிகள், காய்ப்புழுக்கள் போன்ற பாதிப்புகள் இருக்கும். இதனை கட்டுப்படுத்தி மேலாண்மை செய்யும் போது முதல் 40 நாட்களில் முதல் முறையாக காய் ஒடிக்கலாம். இதில் நல்ல மகசூல் பெற முடியும்.
ஆரம்பத்தில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை
ஆரம்பத்தில் காய்கள் பறிக்கும்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய்களை பறிக்கலாம். பின் தினமும் காய் பறிக்கிற அளவு செடிகள் நன்கு வளர்ந்து விளைச்சல் தர ஆரம்பிக்கும். ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கு 200 கிலோ முதல் 300 கிலோ காய்கள் கிடைக்கும். பின் அறுவடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். இருப்பினும் முதல் காய் பறித்ததிலிருந்து 60 நாட்கள் வரை தொடர்ச்சியாக அறுவடை செய்யலாம். நல்ல மகசூல் கிடைக்கும். செலவுன்னு பார்த்தா விதை, களை பறிக்கிறது, இயற்கை உரம்னு ரூ.3000 ஆயிரம் செலவு இருக்கும். அதுக்கு அப்புறமா அதிக செலவு இருக்காது. நான் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 30 கிலோ வரைக்கும் காய் உடைச்சு திருக்காட்டுப்பள்ளி மார்க்கெட்டில் நேரடியாக கொண்டுபோய் ஏலத்தில் விட்:டு வருவேன். விளைச்சல் குறைவாக இருக்கும் போது பூதலூரில் உள்ள காய்கறி கடைகளுக்கு கொடுப்பேன். இதனால தினமும் பணம் கைக்கு வந்திடும். கிலோ ரூ.30 முதல் கிடைக்கும். யார் தலையீடும் இல்லாம நேரடியாக விற்பதால் எனக்கு கூடுதல் லாபம்தான். இப்போ பருவம் தவறி பெய்த மழையால வெண்டைக்காய் கம்மியாக விளைச்சல் இருக்கு. அடுத்த வாரத்தில தினமும் 30 கிலோவாவது உடைச்சிடுவேன். மத்தவங்கக்கிட்ட வேலைக்கு போறதுக்கு பதிலா நானே வெண்டைக்காய் சாகுபடியில் ஒரு நாளைக்கு ரூ.500 லாபம் பார்த்துவிடுவேன்.
அனைத்துச் சத்துக்களும் அடங்கிய இயற்கை உரங்களை செடிகளுக்கு தவறாமல் வழங்க வேண்டும். இடைப்பட்ட காலங்களில் ஏதேனும் நோய்த் தாக்குதல் அல்லது பூச்சித் தாக்குதல் இருப்பது கண்டறிந்தால் அதனை சரிசெய்வதற்கு வேண்டிய மருந்துகளை தெளிச்சா போதும். இப்போ அரை ஏக்கர் அளவில் வெண்டைக்காய், கத்திரிக்காய் விதைச்சிருக்கேன். ஒரு ஏக்கர் அளவில உழுது வயலை தயாராக வைச்சிருக்கேன். இதுல விளைச்சல் குறையும் போது அதுல விதைப்பேன். இப்படி மாறி, மாறி செய்வதால் எனக்கு வெண்டைக்காய் சாகுபடி தினசரி வருமானத்தை கொடுத்துக்கிட்டு இருக்கு. இதுல மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கிறேன்.
மாற்றுப்பயிரை சாகுபடி செய்யணும்
வெண்டை விளைச்சல் முடிந்தவுடன் உடனடியாக மறுபடியும் அதில வெண்டைக்காய் விதைக்க மாட்டேன். மாற்று பயிரை பயிர் செய்வேன். உளுந்து, பயறு என்று பருப்பு வகை சாகுபடி செய்வேன். அதுபோலதான் இப்போ உளுந்தும், நிலக்கடலையும் சாகுபடி செய்து இருக்கேன். அரை ஏக்கரில் வெண்டைக்காய் சாகுபடி முடியும் தருவாயில் அடுடீத்த அரை ஏக்கரில் வெண்டைக்காய் போடுவேன். இப்படி மாற்றி பயிர் செய்யும்போது இதிலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மண்ணில் நிலையாக இருக்கும். அடுத்ததாக பயிரிடப்படும் தாவரங்களுக்கு தேவையான உரங்கள் இயற்கையாக மண்ணில் சேர்க்கப்படுகின்றன.
வயல் ஒருங்கிணைந்த பண்ணையாக மாற்றும்போது செலவும் குறையுது. வருமானமும் பெருகும். இப்போ வெண்டைக்காய், கத்திரிக்காய், நெல், உளுந்து, நிலக்கடலை சாகுபடி செய்து இருக்கேன். ஒவ்வொன்றாக அறுவடை செய்யும் போது சுழற்சி முறையில அடுத்த சாகுபடி செகய்ய ஆரம்பிச்சுடுவேன். எத்தனை சாகுபடி செய்தாலும் வெண்டைக்காய் சாகுபடி எனக்கு பெரிய அளவில் வருமானத்தை கொடுக்குது. ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது எப்பவும் ஒரு இலாபகரமான விவசாயம்தாங்க.

