தஞ்சாவூர்: வேளாண் சட்டங்களை நீக்க கோரி காந்தி சிலையிடம் குழந்தைகள் மனு
’’குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். எனவே தான் குழந்தைகள் அளித்த மனுவிற்காவது மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்’’
கும்பகோணத்தில் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் குழந்தைகள் கையில் தேசிய கொடியிடன் காந்தியிடம் மனு அளித்து மரியாதை செலுத்தினர். விவசாயிகளின் உண்மையான போராட்டத்தை, வியாபாரிகள் போராட்டம், இடைத்தரகர்கள் போராட்டம், வெளிநாட்டில் தூண்டுதல் போராட்டம், தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் போராட்டம், தீவிரவாதிகள் பின்னணி போராட்டம் என்றெல்லாம் பொய்யான கொச்சையான விமர்சனங்களை மத்திய அரசு அவதூறு பரப்பி வருகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வலியுறுத்தி விவசாயிகளின் குழந்தைகள் மகாத்மா காந்தி மனு அளித்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மத்திய அரசு, விவசாயிகளை பெரு வணிகர்களுக்கு நிரந்தரமாக அடிமைகளாக்கி இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும், மூன்று வேளாண் சட்டங்களை, கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் இந்தியாவில் இருக்கும் எந்தவொரு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு அறியாமல் மக்களாட்சிக்கு எதிராக மத்திய அரசு 2020 ஆம் ஆண்டு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் கருப்பு சட்டங்களையும் நிபந்தனையின்றி விலக்கிக் கொள்ள வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி, கடும் குளிரையும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது 305 நாட்களுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது உயிர்களை அர்பணித்து டெல்லி எல்லையில் அறவழியில் அமைதியாக போராடி வருகின்றனர்.
போராடி வரும் விவசாயிகளின் உண்மையான போராட்டத்தை, வியாபாரிகள் போராட்டம், இடைத்தரகர்கள் போராட்டம், வெளிநாட்டில் தூண்டுதல் போராட்டம், தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள் போராட்டம், தீவிரவாதிகள் பின்னணி போராட்டம் என்றெல்லாம் பொய்யான கொச்சையான விமர்சனங்களை மத்திய அரசு அவதூறு பரப்பி உலகில் எங்கும் நடைபெறாத அமைதியான அறவழிப் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு கீழ்த்தரமான உத்திகளை கையாண்டு முயற்சிகளில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டது.
மத்திய அரசிற்கு ஐநா சபை பல உள்ளிட்ட பல வெளி நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், மனிதநேயமிக்கவர்கள் பலர் இந்திய மத்திய அரசிற்கு, இந்தியாவில் போராடுகின்ற விவசாயிகள் போராட்டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து பல்வேறு அறிவுரைகளை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், விவசாயிகள் உரிமைப் போராட்டத்திற்கு நல்லதொரு சுமுகமான தீர்வு காணுமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அதனை சிறிதும் பொருட்படுத்தாது பெருநிறுவனங்களின் கொத்தடிமைகளாக மத்திய அரசு மாறிவிட்டது.
மத்திய அரசு இனியும் பிடிவாதம் என்று நிபந்தனையின்றி மூன்று விரோத கருப்புச் சட்டங்களை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி உத்தமர் காந்தியடிகளின் 153 வது பிறந்த தினத்தில், கும்பகோணம், உச்சிபிள்ளையார் கோயில் அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு, விவசாயிகள் குழந்தைகளான, முருகவேல், உதயகுமார், ஸ்ரீராம்ரமேஷ், ஹரிஹரன் செல்வன் ஆகியோர் கையில் தேசிய கொடியுடன் வந்து மலர் தூவி மரியாதை செலுத்தி, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, மனு அளித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நநிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் விவசாயிகளான நடராஜன் மற்றும் ஆதிகலியபெருமாள் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் விவசாயிகளான சின்னதுரை, ராமநாதன், வாசுதேவன், ரகுபதி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமலநாதன் நன்றி கூறினார். அப்போது மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக்கோரி கண்டன கோஷங்களிட்டனர். இது குறித்து செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன் கூறுகையில்,
கடந்த 300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் இரவு பகல் பாராமல் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதே போல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலத்திலுமுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மத்தியஅரசு போராடி வரும் விவசாயிகளை கொச்சப்படுத்துகின்றன. விவசாயிகளாகிய நாங்கள் பல்வேறு போராட்டங்கள் செய்தும், மத்திய அரசு செவிசாய்க்காததால், எங்களது விவசாயிகளின் குழந்தைகள் விட்டு மனு அளித்துள்ளோம். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். எனவே தான் குழந்தைகள் அளித்த மனுவிற்காவது மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.