தஞ்சை பெரிய கோயிலில் சிதிலமடைந்து வரும் திருக்கயிலாய பாதை மதில் சுவர்... உடனே சீரமைக்கணும்னு பக்தர்கள் வலியுறுத்தல்
பெரிய கோட்டையைச் சுற்றியிருந்த மதில் சுவர் பெரும்பாலான இடங்களில் சிதிலமடைந்து உருமாறி விட்டது. எஞ்சியுள்ள மதில் சுவர்களும் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பெரியகோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவர் சிதிலமடைந்து வருகிறது. இதனால் பௌர்ணமி திருக்கயிலாய கிரிவல பாதையும் சரிந்து வருகிறது. மண் சரிவு ஏற்படுவதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
உலக அளவில் பிரபலமான தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. பின்னர், தஞ்சாவூரைக் கைப்பற்றிய நாயக்கர்களுக்கு தலைநகரைப் புதிதாக அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், பெரியகோயில், சிவகங்கை குளம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோட்டை மதிலும், அதைச் சுற்றி அகழியும் ஏற்படுத்தி சிறிய கோட்டை உருவாக்கப்பட்டது. பெரியகோயிலுக்கு தனியாக மதில் சுவர் இருந்தாலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகள், சிவகங்கை குளம், அதன் கரையில் சில கட்டடங்களை உள்ளடக்கி, கோட்டைச் சுவர்கள் எழுப்பப்பட்டன.

அகழியை ஒட்டியுள்ள மதில் சுவர் கருங்கல், செங்கற்களாலும், உள்புற கொத்தள மதில் சுவர் செம்புறாங்கற்களாலும் சுமார் 40 அடி உயரத்துக்கு கட்டப்பட்டுள்ளன. இதற்கு வெளியே நான்கு ராஜ வீதிகளைக் கொண்டு அகழி, மதில் சுவருடன் பெரிய கோட்டை அமைக்கப்பட்டது. இந்தப் பெரிய கோட்டையைச் சுற்றியிருந்த மதில் சுவர் பெரும்பாலான இடங்களில் சிதிலமடைந்து உருமாறி விட்டது. எஞ்சியுள்ள மதில் சுவர்களும் பல இடங்களில் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இதேபோல, சிறிய கோட்டைச் சுவரும் சிதிலமடைந்து வருகிறது. இதில், பெரியகோயில் நுழைவுவாயிலை ஒட்டியுள்ள முன் புறம் மட்டும் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், வடக்கு, தெற்கு, மேற்கு புறங்களில் இன்னும் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால், மரம், செடி, கொடிகள் வளர்ந்து இடைவெளி விட்டு, விட்டு பல இடங்களில் இடிந்து விழுந்துவிட்டது. வடக்கு புற சிறிய கோட்டை மதில் சுவர் முழுவதுமாக இடிந்து விட்டதால், சில இடங்களில் திருக்கயிலாய வலம் செல்லும் பாதையும் சரிந்து வருகிறது. இதனால், மாதந்தோறும் பெüர்ணமி நாளில் திருக்கயிலாய வலம் செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், மேற்கு, தெற்கு புறமும் அகழியையொட்டி உள்ள மதில் சுவரில் இடையிடையே இடிந்து விழுந்து விட்டது. இந்த இடங்களில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு புறம் அகழியையொட்டியுள்ள மதில் சுவர் முழுமையாக இடிந்து விழுந்துவிட்டதால், திருக்கயிலாய வலம் செல்லும் பாதையும் சரிந்து வருகிறது. இதனால் பாதை குறுகிக் கொண்டே வருவதால், பக்தர்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பக்கவாட்டில் கம்பி வேலி அமைக்கப்பட்டு, அபாயம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண் சரிந்து வருவதால் ஆபத்தான நிலையில் உள்ளது. இனி வரும் மாதங்களில் மழை பொழிவு அதிகம் இருந்தால் இப்பாதையும் முழுமையாகச் சரிந்து அகழியில் விழுந்து விடும் நிலை உள்ளது. எனவே, அகழியை முழுமையாகத் தூர் வாரி, சிறிய கோட்டை மதில் சுவரை சீரமைப்பதற்கான நடவடிக்கையை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலை தொடர்ந்தால், உலகப் புகழ்பெற்ற வரலாற்றுப் பெருமையை நாம் இழக்கும் நிலை ஏற்படும். எனவே, சிறிய கோட்டை மதில் சுவரை சீரமைப்பதற்கு உடனடியாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான் தஞ்சை மக்கள் மற்றும் பக்தர்களின் வலியுறுத்தலாக உள்ளது.





















