’மயிலாடுதுறை மக்களை கதறவிடும் கதண்டுகள்’...! - பள்ளி மாணவர்களுக்கு சிகிச்சை...!
மயிலாடுதுறை அருகே கதண்டு கடித்து பள்ளி ஆசிரியை மாணவர்கள் உள்ளிட்ட 5 பேர் காயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வாசலில் உள்ள வேப்பமரத்தில் கதண்டு வகை விஷவண்டுகள் கூடுகட்டியுள்ளது. இந்நிலையில், இன்று அப்பள்ளி ஆசிரியை மதுராந்தகி என்பவர் பள்ளியில் இருந்து வெளியில் வந்தபோது, அந்த மரத்தில் கூடுகட்டியிருந்த கதண்டுகள் அவரை கடித்தன. மேலும், அவ்வழியே சென்ற மேலப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி 34 வயதான காயத்ரி, அவரது 10 வயது மகள் கனிஷ்கா, 7 வயது மகன் கௌதம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான கிருஷ்ணவேணி என்பவரையும் கதண்டு வண்டுகள் கடித்து தாக்கின. இதனையடுத்து கதண்டு விஷவண்டுகள் கடித்ததில், காயமடைந்த 5 பேரையும் அருகில் இருந்தவர்கள் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிகள் திறந்த நிலையில் பள்ளியின் வெளியில் உள்ள வேப்பமரத்திலும், பள்ளி வளாகத்தில் உள்ள மற்றொரு மரத்திலும் கூடுகட்டியுள்ள கதண்டு கூடுகளை மேலும் மாணவர்களை கடித்து அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாக அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கதண்டு என்ற கொடிய விஷ வண்டு காட்டுப்பகுதிகளில் அதிகளவில் காணப்படும். காடுகள் அழிக்கப்பட்டதால் நகரில் மக்கள் நடமாட்டம் குறைவான பகுதிகளில் பனைமரங்கள், தென்னை மரங்கள், பழைய கட்டிடங்களில் கூடுகட்டி வசித்து வருகிறது. இந்த கொடிய விஷவண்டு கூட்டமாக வந்து மனிதர்களை தாக்க கூடியவை. ஒருவரை நான்குக்கும் மேற்பட்ட கதண்டுகள் கடித்தால் உயிர்பிழைப்பது கடினம். அதேபோன்று தலையில் கடித்தால் விஷம் உடனடியாக மூளையை தாக்கும் கிட்னியை செயலிழக்க செய்யும் தன்மைக்கொண்டது. சிறு குழந்தைகளை இரண்டு வண்டுகள் கடித்தாலே உயிரிழக்க நேரிடும் அபாயம் கொண்டது. வண்டுகள் இனத்தில் கொடிய வண்டுகளாக கதண்டு வகை வண்டுகள் உள்ளன.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் இது போன்ற விஷ வண்டுகள் அங்கங்கே கூடு கட்டி வருவதும், அவ்வப்போது மக்களையும், மரத்தடியில் விளையாடும் குழந்தைகளையும் கடித்து காயப்படுத்துவதும், இதனால் சிலர் உயிரிழக்கும் சம்பங்களும் நடந்தேறி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன், தீயணைப்பு மீட்பு பணிகள் இல்லாத நேரங்களில் இது போன்று பழைமையான மரங்கள், கட்டிடங்களை அவ்வப்போது ஆய்வு செய்து அவற்றில் கூடு கட்டியுள்ள விஷ வண்டுகளை அழிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமுக ஆர்வலர்கள் பலரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் மரத்தில் கூடுகட்டியுள்ள விஷவண்டுகளால் விவசாய வேலைகளை தவிர்க்கும் மக்கள்...!