TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான மனுவின் தகவல்கள் வெளியானது முதலே தொடர்ச்சியாக விஜயை சரமாரியாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆனால் சட்டப்படி இது தவறு எனவும் சொல்லப்பட்டும் வருகிறது.

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் தனிப்பட்ட இருவருக்குமான வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேசலாமா? - சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறதா என்பது பற்றிக் காணலாம்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல்முறையாக களம் காண்கிறது. அந்த கட்சி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது நிசர்தனமான உண்மை. அதேசமயம் பழமை வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த கட்சிகள் களத்தில் இருப்பதால் தேர்தல் களம் கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
இதனிடையே விஜய் பொது வாழ்க்கைக்கு வந்ததில் இருந்தே அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள் பல வகையில் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோர் விஜயுடன் இல்லை. லண்டனில் தனியாக வசித்து வருகிறார்கள். விஜய்க்கும், அவர் மனைவிக்கும் பிரச்னை என்றெல்லாம் தகவல்கள் பரவி வந்தது. அதேசமயம் அவருடன் இரண்டு நடிகைகளை இணைத்தும் பேசப்பட்டது. ஆனால் இவை எதற்குமே யாருமே பதிலளிக்கவில்லை.
இப்படியான நிலையில் சங்கீதா, விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விமர்சனம்
கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு குறித்த தகவல்கள் அப்படியே வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பொதுவாக விவகாரத்து என்பது கணவன், மனைவி சம்பந்தப்பட்ட விஷயமாகும். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவில் யார் வேண்டுமானாலும் யார் மீது இல்லாத தவறுகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவை வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. சில நேரங்களில் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகள் சுமத்தும் வழக்குகளை நாம் பார்த்திருக்க முடியும்.
எனினும் சட்டப்படி அதனை தீர விசாரித்து அதில் சரி, தவறு என தீர்ப்பு வழங்கும் உரிமை நீதிமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது. இப்படியான நிலையில் விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், இதுபற்றி கேட்டப்போது தனக்கான உரிமைகள் முடக்கப்பட்டதாகவும் அதில் குற்றச்சாட்டுகளை சங்கீதா தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வழக்கு தொடர்பான மனுவின் தகவல்கள் வெளியானது முதலே தொடர்ச்சியாக விஜயை சரமாரியாக சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் சங்கீதாவை வைத்து விஜயை சிலர் பழி வாங்கி விட்டதாகவும் பதிவுகளை பார்க்க முடிகிறது.
சட்டம் சொல்வது என்ன?
ஆனால் சட்ட நிபுணர்கள் கூற்றுப்படி, இது தனிநபர் இடையே தொடுக்கப்பட்ட வழக்கு என்பதால் இதில் கருத்து, விமர்சனம் எதையும் யாரும் முன்வைக்க முடியாது. இது மிகவும் இரகசியமாக வைக்கப்பட வேண்டியது. ஆனால் பொது வெளியில் விவகாரத்து மனு தொடர்பான தகவல்கள் வெளியானது எப்படி என தெரியவில்லை. கணவன், மனைவி இடையே ஒத்து வரவில்லை என்றால் இன்றைக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாடுவது என்பது சாதாரண விஷயமாகும். ஆனால் அது சமூக பிரபலமாக இருக்கும்போது அதை மிகப்பெரிய விஷயமாக பேசுவது தவறானது. அது அவர்களின் தனிப்பட்ட விஷயமாகும்.
ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு பிரபல நடிகை ஒருவர் விவாகரத்து வழக்கில் தன்னைப் பற்றி எதையும் செய்தியாக வெளியிட தடை வேண்டும் என உயர்நீதிமன்றத்தை நாடினார். செய்தியை வெளியிட தடை சட்டப்படி விதிக்க முடியாது என்பது இருந்தாலும் இந்து திருமண சட்டத்தின்படி ஒரு பெண்ணின் திருமணம் தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதிக்க முடியும் என இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார். இதன்பின்னர் எத்தனையோ வழக்குகளை நாம் பார்த்திருக்க முடியும். ஆகவே சட்டப்படி ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது, கருத்து தெரிவிப்பதும் தவறான விஷயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























