மயிலாடுதுறை : ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் : மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடும் கண்டனம்!
ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவிரிப்படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை அடுத்த வடதெரு கிராமத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு சர்வதேச ஏலம் விடப்படுவதற்கு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன், காவிரிப்படுகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச ஏலத்துக்கு ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அழைப்பு விடுத்திருக்கிறது. கடந்த 10-ஆம் தேதி இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஏலம் தொடர்பாக இணைய வழியாக கருத்து பரிமாற்றம் வரும் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. காவிரிப்படுகையை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதென இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. உடனடியாக இது கைவிடப்பட வேண்டும் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பபு வலியுறுத்துகிறது.
மேலும், கண்டுபிடிக்கப்பட்ட சிறு எண்ணெய் வயல்கள் என்ற பெயரில் புதுக்கோட்டையில் நெடுவாசல் அருகில் வடதெரு என்கிற கிராமத்தில் 463 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 19 எண்ணெய் கிணறுகளை அமைக்க திட்டமிட்டு, அதற்கான ஏலம் தற்போது நடைபெற உள்ளது. ஓஎன்ஜிசியும், ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனமும் ஏற்கெனவே ஆய்வு செய்து வைத்திருந்த அந்த நிலங்களை அவர்களிடமிருந்து பறித்து, பன்னாட்டு முதலாளிகளிடம் இந்திய அரசு தற்போது ஒப்படைக்கிறது. இந்தியா முழுவதும் 75 எண்ணெய் வயல்களிலிலும் இதனை நடைமுறைப்படுத்த இருக்கிறார்கள்.
இந்த திட்டத்தில் நீரியல் விரிசல் என்ற அபாயகரமான ரசாயனத்தை பயன்படுத்தி செயற்கை பூகம்பத்தை உருவாக்கி எடுக்கக்கூடிய மரபு சாரா எண்ணெய் எரிவாயு எடுப்பு இதில் நடத்தப்பட்டவுள்ளது என அவர்களே கூறியிருக்கிறார்கள். எனவே, வடதெரு கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களும் இதனால் அழிவுக்கு உள்ளாகும். 2021 பிப்ரவரியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. ஆளுநரும் இதற்கு கையெழுத்திட்டுள்ளார்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 5 வட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் வருகிறது. இந்த பகுதியிலேயே அடாவடியாக இந்த ஏலத்தை அரசு நடத்த முயற்சிக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். டெல்டா மாவட்டம் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கச்சா எண்ணெய் - எரிவாயு கிணறுகளால் இப்பகுதி மக்கள் பலவிதமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் விதமாக, மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் என அடுத்தடுத்து பல ஆபத்தான திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து நிரந்தரமாக பாதுகாக்க, காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார்கள். இதன் பலனாக, கடந்த ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி தாலுகாவையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக வரையறுத்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில், தற்போது இங்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது இப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.