துல்லியமான ஸ்டெப்ஸ் போட்டு கோலாட்டம் ஆடிய மேயர்: அவரு எங்க வீட்டு பிள்ளைங்க என மக்கள் பெருமிதம்
அவரை நாங்கள் மேயர் என்று நினைக்காதபடி எங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைக்க வைத்துள்ளார். இந்தளவிற்கு எளிமையான மேயரை எங்கேயும், எப்போதும் பார்க்க முடியாது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் தேர் திருவிழாவின்போது மக்களோடு மக்களாக கோலாட்டத்தை அசத்தலாக ஆடிய மாநகராட்சி மேயன் சண்.ராமநாதன் குறித்த வீடியோ இணையத்தில் வெகு வேகமாக பரவி வருகிறது.
மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர். சிறந்த சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் பெரிய கோயில் விளங்கி வருகிறது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் 18 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை, மாலை வேளைகளில் 3 சுவாமி அம்பாள் புறப்பாடு 4 ராஜவீதிகளில் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு தியாகராஜர், கமலாம்பாள், விநாயகர், நீலோத்பலாம்பாள், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் முத்துமணி அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பட்டு, மேல வீதியில் உள்ள தேர்நிலை மண்டபத்துக்கு வந்தடைந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய தியாகராஜர், கமலாம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், முரசொலி எம்.பி, முதன்மை மாவட்ட நீதிபதி பூரண ஜெயஆனந்த், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி வீமூர்த்தானந்தர், ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பலர் தொடக்கி வைத்தனர்.
தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு மத்தியில் அழகிய குழந்தை போல் தேரோட்டம் நடந்தது. இங்குதாங்க இருக்கு செம டிவிஸ்ட். தேரோட்டத்தை தொடக்கி வைத்தது மட்டுமின்றி மக்களோடு மக்களாக தேருக்கு முன்பு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நடந்து வந்து கொண்டு இருந்தார். மேலவீதி திருப்பம் வடக்குவீதி ஆரம்பம் ஆகும் பகுதியில் உள்ள மூலை அனுமார் கோயில் பகுதியில் பெண்கள் தேரோட்டத்தை ஒட்டி கோலாட்டம் ஆடியபடியே இருந்தனர். அப்போது கோலாட்டம் ஆடிய பெண்களில் ஒருவர் நம்ம மேயர் வர்றாரு என்ற உற்சாக கோஷத்தை எழுப்பி எங்களுடன் கோலாட்டம் ஆடுவீர்களா என்று கேள்வி எழுப்ப, அவ்வளவுதான் அட்டகாசமான ஸ்டெப்ஸ் போட்டு பிசிறு தட்டாமல் கோலாட்டம் ஆடினார் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். மிகவும் எளிமையாக மக்களுடன் மக்களாக வந்த அவர் கோலாட்டத்தை அட்டகாசமாக ஆடியதை பார்த்து மக்கள் உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து மேயர் சண். ராமநாதன் மேலும் உற்சாகமாக கோலாட்டம் ஆடினார்.

இதுகுறித்து கோலாட்டம் ஆடியபடி பெண்களில் ஒருவர் கூறுகையில், அவரை நாங்கள் மேயர் என்று நினைக்காதபடி எங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைக்க வைத்துள்ளார். இந்தளவிற்கு எளிமையான மேயரை எங்கேயும், எப்போதும் பார்க்க முடியாது. அவருடைய அலுவலகத்திற்கு பொதுமக்கள் சென்றால் அவரை நிச்சயம் சந்திக்கலாம். எந்த தடையும் இருக்காது. ரொம்பவே எளிமையானவர். நம்ம பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் போல் அனைவரிடமும் ஒரே மாதிரி பழகுவார். அதற்கு இப்போது அவர் கோலாட்டம் ஆடியதே சாட்சி என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேயர் சண்.ராமநாதனிடம் இதுகுறித்து கேட்டபோது... மிகவும் சாதாரணமான என்னை மேயர் பதவியில் அமர வைத்த முதல்வர் எப்படி செயல்படுகிறாரோ அந்த வழியில்தான் நாங்களும் நடை போடுகிறோம். மக்கள்தான் என்னை தேர்ந்தெடுத்தனர். எப்போதும் மக்களோடு மக்களாக இருப்பதையே நான் விரும்புகிறேன். நான் எப்போதும் மக்களின் சேவகன்தான் என்று பெருமிதமாக தெரிவித்தார்.
கோலாட்டம் ஆடிய மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனின் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.





















