மயிலாடுதுறை : ”சரியா தூர்வாரல, வெள்ளம் வந்தா சிக்கலாகிடும்” - ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
ஆற்றில் சரிவர தூர்வாரவில்லை எனகூறி சீர்காழி அருகே தென்னலக்குடி கூப்பிடுவான் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கவேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர்வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவுசெய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர்.
தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சீர்காழி அருகே தென்னலகுடி கூப்பிடுவான் உப்பனாற்றை சரிவர தூர்வாரவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டி ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூப்பிடுவான் உப்பனாற்றை தூர்வார கடந்த 10 நாட்களுக்கு முன் அரசு உத்தரவிட்டு, அதனைத் தொடர்ந்து தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஆற்றை சரிவர தூர்வாராமல் பணி முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் இன்று திடீரென கூப்பிடுவான் ஆற்றில் இறங்கி அரசு அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழைவெள்ள காலங்களில் செம்பதனிருப்பு, காத்திருப்பு, கண்டமங்கலம், பாகசாலை, மேலச்சாலை, கீழசாலை, திருவாலி கீழையூர், காரைமேடு, அன்னப்பெருமாள் கோவில், தென்னலக்குடி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வடிகாலாக இந்த கூப்பிடுவான் உப்பனாறு திகழ்வதாகவும், இந்த உப்பனாற்றை சரிவர தூர்வாராதால் மேற்கண்ட கிராமங்கள் மழை வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க உடனடியாக உப்பனாற்றை சரிவர தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.