கண்தானம் செய்வோம்... பார்வை பெற உதவுவோம்: தஞ்சையில் கண்தான விழிப்புணர்வு பேரணி
பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கண் பார்வை இழப்பு என்பது இந்தியாவில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவிகிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க கண்தானம் பெரிதும் உதவுகிறது.
இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்த மாட்டார்கள். கண்ணிலுள்ள கார்னியா என்ற கருவிழியை மட்டும் எடுத்து பார்வையிழந்தவருக்கு பொருத்துகிறார்கள். கண்களை எடுத்தபின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமாக தோன்றாது.
இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப்பட்டோ அல்லது தீயினால் எரிக்கப்பட்டோ, எவ்வித பலனும் இல்லாமல் போகக்கூடிய கண்கள் தானமாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள். கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. இது கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்றுசிகிச்சை செய்யும் கண்மருத்துவமனை மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.
நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்புகொள்ளலாம். இந்த கண்தானம் குறித்து மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்த கண் தான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் தொடக்கி வைத்தார்.
பின்னர் அவர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர் இராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தின. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து, ராஜா மிராசுதார் கண் மருத்தவமனை வரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு செவிலியப் பயிற்சி பள்ளி மாணவிகள், குந்தவை நாச்சியார், பான் செக்கர்ஸ், சுவாமி விவேகானந்தா,மருதுப் பாண்டியர் கல்லூரி மாணவ, மாணவிகள், நாட்டுநலப்பணிதிட்டமாணவர்கள், ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் 650 பேர் இப்பேரணியில் கலந்துகொண்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் 37வது கண்தான இருவார விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள் கண்தான உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இதில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருதுதுரை, துணை இயக்குனர் நமச்சிவாயம் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட இயக்குனர் ஞானசெல்வன், லயன்ஸ் மாவட்டமுன்னாள் ஆளுநர்கள் முகமதுஃரபி, பிரேம், மணிவண்ணன், முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.