தேவையான அளவு கையிருப்பில் இருக்குங்க... அரியலூர் கலெக்டர் சொன்னது எதற்கு?
நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் 34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:
இதுநாள் வரை மழை பெய்த அளவு
அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டில் இம்மாதம் இதுநாள் வரை 638.05 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1942 மெ.டன் யூரியா, 363 மெ.டன் டி.ஏ.பி 504 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1086 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.
சான்று பெற்ற நெல் விதைகள் விநியோகம்
இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் மூலம் 198.69 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 160 மெ.டன் என கூடுதலாக 358.69 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது.
நுண்சத்து, உயிர் உரங்கள் கையிருப்பு
நெல் விதைகள் விதை கிராம திட்டத்தில் ஒரு கிலோ ரூ.17.50 வழங்கப்படுகிறது. மேலும் நெல் நுண்சத்து, உயிர் உரங்கள், சூடோமோனாஸ், ட்ரைக்கோடெர்மா போன்ற உயிரியல் காரணிகள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேளாண் அடுக்குத் திட்டம்
தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெரும் வகையில் வேளாண்மைத்துறையில் வேளாண்மை அடுக்குத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆதார் எண், புகைப்படம், வங்கி கணக்கு எண், நில உரிமை ஆவணங்கள் ஆகியவை கிரைன்ஸ் என்ற இணைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கிரைன்ஸ் வலைதளத்தின் மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
விவசாயிகள் பதிவு செய்து கொள்ளுங்கள்
இது ஒற்றை சாலர வலைதளமாக செயல்படுவதால் விவசாயிகள் 13 துறைசார்ந்த திட்டங்களுக்கும், ஒரே இடத்தில் பதிவு செய்து அரசின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். எனவே பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக உரிய ஆவணங்களுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர்களை ஆகியோரை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, வேளாண்மை இணை இயக்குநர் கீதா, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து விவசாயிகள் உரம், சாகுபடியில் ஏற்படும் பிரச்னை, சாலை வசதி, காப்பீடு குறித்த விபரங்கள் என்று தங்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர். தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.