யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 வரை சிறையில் அடைக்க உத்தரவு!
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளதாக மாரிதாஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளதாக கைதான யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை தளபதி மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாரிதாஸ் புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது 153 ஏ, 504, 505 (2), 505 (1)பி சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாரிதாஸை டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மதுரை மாவட்ட 4ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளதாக மாரிதாஸ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
#BREAKING | மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் கைது https://t.co/wupaoCQKa2 | #Maridhas | #Madurai | #TNPolice pic.twitter.com/NXIlo95nGX
— ABP Nadu (@abpnadu) December 9, 2021
தமிழ்நாட்டில் உள்ள யூடியூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஏற்கெனவெ தனியார் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பதும், அதன் காரணமாக அவர்கள் பணி விலக்கம் செய்யப்பட்டதும், விலகியதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டு அவரது வீட்டிற்கு சென்றஅதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக யூ டியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், ஆபாசமாக பெண்களிடம் பேசிய மதன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும், மாரிதாஸை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்