மாமல்லபுரம் சிற்பியின் சாதனை! 15 அடி திரிபுரசுந்தரி அம்மன் சிலை: வடகிழக்கு பயணம், எதிர்பார்ப்பு என்ன?
"மாமல்லபுரத்தில் 15 அடி உயரத்தில் 20 டன் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட திரிபுரசுந்தரி அம்மன் சிலை, திரிபுரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டது."

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலைக்கூடத்தில் பிரபல மூத்த சிற்பக்கலைஞர் பி.எஸ்.பூபதி என்பவர், 20 டன் எடை கொண்ட கருங்கல்லில் 15 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் திரிபுரசுந்தரி அம்மன் சிலையை ஆகம விதிகளின்படி அழகுர வடிவமைத்துள்ளார்.
திரிபுரசுந்தரி அம்மன் சிலை
வலது, இடது இரண்டு கரங்களில் பாசம், அங்குஷம் மற்ற இரண்டு கரங்களில் கரும்பு, தாழம்பூ ஏந்திய நான்கு திருக்கரங்களுடன், அடியில் சிங்கவாகனத்துடன் 10 சிற்பிகளை கொண்டு இரவு, பகலாக கடந்த 6 மாதங்களாக நின்ற திருக்கோலத்தில் இச்சிலையை சிற்பி பூபதி அழகுர வடிவமைத்துள்ளார். இச்சிலை வருகிற ஏப்ரல் 21-ந்தேதி திரிபுரா மாநிலம், அகர்தாலா நகரத்தில் கற்தூண்களுக்கு மத்தியில் திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
சிரித்த முகத்துடன் அம்மனின் சிலை
திரிபுரா மாநிலத்தில் அதிக உயரத்தில் நிறுவப்படும் முதல் அம்மன் சிலை இதுவே ஆகும். 95 சதவிதம் பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இறுதியாக 5 சதவிகித முகம் வடிவமைக்கும் பணிகள் மட்டும் சிற்ப சாஸ்திரத்தில் முக்கிய பணியாக பார்க்கப்படுவது வழக்கம்.
குறிப்பாக எதிர்ப்பார்க்கின்ற முக பாவத்தில் தலைமை சிற்பியே முகத்தை வடிவமைப்பார், அந்த வகையில் சிற்பி பி.எஸ்.பூபதி சுமார் 4 மணி நேரம் எடுத்து கொண்டு உளி, சுத்தியல் மூலம், திரிபுரஅம்மன் சிலையின் முகம் எப்படி இருக்கும், என, மனதில் பதியவைத்துக்கொண்டு, புன்முறுவல் பூத்த சிரித்த முகத்துடன் அம்மனின் அழகிய முகத்தை பொலிவுடன் வடிவமைத்து, கண் திறந்து 100 சதவிகித பணிகள் முடித்து முழு சிலையை கொண்டு வந்தார்.
சிலை சென்றடைய எவ்வளவு நாட்கள் ?
பிறகு அம்மன் சிலைக்கு சைவ ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு, டிரைலர் லாரியில் கிடத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஆந்திரா, தெலுங்கானா, பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், மணிப்பூர், மிசேராம் ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் வழியாக இரண்டு வாரங்கள் (17 நாட்கள்) கடந்து திரிபுரா மாநிலத்திற்கு சென்று சேர்கிறது.
வழி நெடுகிலும் இந்த சிலைக்கு வடகிழக்கு மாநில மக்கள், அம்மன் பக்தர்கள் பூஜைகள் செய்து வழிபாடு செய்து வணங்குகின்றனர். முன்னதாக இந்த அம்மன் சிலையை வடிப்பதற்காக பிரத்யேகமாக 20 டன் கருங்கல் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரியில் இருந்து கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்






















