Vachathi case: வாச்சாத்தி கொடூரம்: குற்றவாளிகளின் மேல்முறையீடு தள்ளுபடி- சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளின் மேல் முறையீடு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம், இன்று (செப்.29) விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளது. அதாவது குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
1990களில் சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி வந்த தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த மகள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாக தமிழக வனத்துறையினர் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியன்று ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து பலமணி நேரடத தேடுதல் வேட்டையை நடத்தினர். இதன் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைதுசெய்தனர். அவர்களில் 90 பேர் பெண்கள், 28 குழந்தைகள், 15 ஆண்கள் ஆவர்.
அதேசமயம், சந்தனக் கட்டை கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வாச்சாத்தி கிராமத்தினர், இந்த விசாராணை மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது கூட்டுக்குழுவில் இடம்பெற்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள், வாச்சாத்தியைச் சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும், அவர்களின் குடிசைகள் தகர்க்கப்பட்டு, வீட்டிலிருந்த பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தினர். இந்த புகார்களை அன்றைய மாநில அரசு ஆரம்பத்தில் மறுத்தது. அதே சமயம் இதுதொடர்பாக 1992 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது.
215 பேரும் குற்றவாளிகள்
இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்கிற புகாரைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. 19 ஆண்டு காலம் நடந்துவந்த வழக்கில் 2011ஆம் ஆண்டுசெப்.29-ல் தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 269 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. வழக்கு நடந்த 19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். இந்தப் பின்னணியில், குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களில் 126 பேர் தமிழக அரசின் வனத்துறை அலுவலர்கள். 84 பேர் தமிழக காவல்துறையினர். மீதமுள்ள ஐந்து பேர் தமிழக வருவாய்த் துறை ஊழியர்கள்.இதில் பாலியல் வன்முறையி்ல் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார். இவர்களில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், ஐந்து பேருக்கு ஏழு ஆண்டுகளும் தண்டனை விதிக்கப்பட்டது.
ஏனையோர் வாச்சாத்தி மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும் அவர்கள் உடைமைகளை சூறையாடியதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மு்தல் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு
இதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வாச்சாத்தி மலை கிராமத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களான கிராமத்தில் உள்ள ஆலமரம், மாரியம்மன் கோவில், குடிநீர் தொட்டி, ஏரி, அருகில் உள்ள அரசநத்தம், கலசப்பாடி மலை கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து கிராமத்தில், ஆங்காங்கே குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வருவதை அறியாத கிராம மக்கள், ஆலமரத்தடியில் காத்திருந்தனர். ஆனால் கள ஆய்வை முடித்து விட்டு வந்த நீதிபதி வேல்முருகன். பாதிக்கப்பட்ட கிராம மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது வழக்குகள் தொடர்பாக எதையும் அவர்களிடம் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளதா என கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டு கிளம்பினார்.
இந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட மேல்முறையீடு வழக்குகளில் இன்று (செப்டம்பர் 29) நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்து உள்ளார். இதில் குற்றவாளிகளின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.