TN Urban Local Body Election: மேயர், Chairman-ஐ தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தலா?
தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நீண்ட இடைவேளைக்கு பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அதில் கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்தாண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கான தேர்தல் மறைமுகமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு கிராமபுற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் எப்படி மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதேபோல் நகர்புறங்களில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் திமுக மாவட்ட செயலாளர்கள் சில மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு நடைபெற்ற கிராமபுற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றது. இதனால் அதே மாதிரி மறைமுக தேர்தல் நடத்தி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிற்கான தலைவர்களையும் தேர்ந்தெடுக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்திருந்தார். 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தவும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையரை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணையை ஜனவரி 3 வது வாரத்தில் வெளியிடவும் உள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் கடைசியாக 2011ஆம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: "பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சர்".. செந்தில் பாலாஜிக்கு எதிராக பார் உரிமையாளர்கள் போராட்டம்!