‛பிடிஆர்.,க்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது... மீண்டும் பேசினால்...’ -டிகேஎஸ் இளங்கோவன் பகீர் பேட்டி!
ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். நான் எப்போதும் அவரிடம் அதைதான் சொல்வேன். எதிரணியினர் எப்போதும் நம்மை சீண்ட முயற்சிப்பார்கள்.
நிதியமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்ற நாள் முதல், அவர் மீதிருந்த எதிர்ப்பை கடந்து அவர் மீதான சர்ச்சைகளே தற்போது அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் பதிலளிப்பது என்பது வேறு; அவர்களாகவே இறங்கி பதில் அளிப்பது என்பது வேறு. இதில் இரண்டாவதை தான் பழனிவேல் தியாகராஜன் செய்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், அதில் வரும் கருத்துக்களுக்கு உடனே பதிலளிப்பதை வாடிக்கையாக கொண்டவர். சில நேரங்களில் அவரது கருத்துக்கள் அவர் வகிக்கும் பதவிக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அதுவே அவர் மீதான விமர்சனத்திற்கும் காரணமாகிறது.
இதற்கு முன் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வைத்த கருத்துக்களுக்கு அவர் பாணியில் பதில் அளித்ததால், அதை ஆரம்பத்தில் பதிலடியாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் நாளடைவில் அதுவே அவரது பாணியாக மாறியாது. சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்தும், அதற்கும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்தும், அது சமூக வலைதளத்தில் ஏற்படுத்திய தாக்கமும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் திமுகவின் செய்தி தொடர்பாளரும் எம்.பி.,யுமான ஆர்.எஸ்.பாரதி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் செயல்பாடு குறித்து தனது விமர்சனத்தை ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியாக தெரிவித்துள்ளார்.
இதோ பிடிஆர் குறித்து டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்த பேட்டி:
பிடிஆர் எளிதில் எரிச்சல் அடைகிறார். அவர் பேசுவதில் பெரும்பாலான பேச்சுக்கள் அவர் ஆத்திரமடைவதன் வெளிப்பாடாகவே உள்ளது. அவர் யாரையும் வம்புக்கு அழைப்பதில்லை, வம்புக்கு பேசுவதில்லை. ஆனால், மற்றவர்களின் பேச்சால் எளிதில் ஆத்திரமடைகிறார். ஓர் அரசியல்வாதியாக தன்னை அவர் கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். நான் எப்போதும் அவரிடம் அதைதான் சொல்வேன். எதிரணியினர் எப்போதும் நம்மை சீண்ட முயற்சிப்பார்கள். அப்போது நாம் அதை சரியான அணுக வேண்டியதுள்ளது. ஏனென்றால், அரசியல் களம் வித்தியாசமனது. அதிகாரத்தில் இருக்கும் நாம், செயல்களில் ஈடுபட வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்ப்பார்கள், சண்டைபோட வேண்டுமென விரும்பமாட்டார்கள். இதைத்தான் நான் எப்போதும் அவருக்கு பரிந்துரைப்பேன்.
திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும் கவனித்து வருகிறார். அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். பழனிவேல் தியாகராஜனுக்கும் அவர் அறிவுரை வழங்குவார். எதிர்கட்சிகள் என்றால் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அதை நாம் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
எங்கள் கட்சி தலைமை, பிடிஆர் பேசுவதை கவனித்து வருகிறார். ஏற்கனவே இது குறித்து ஒரு முறை அறிவுரை வழங்கியுள்ளார், இனி மேல் இது போன்ற சம்வங்கள் தொடர்ந்து நடைபெற்றால் அவர் மீண்டும் அறிவுரை வழங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.