TN Corona Update: கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக 1020 படுக்கை வசதிகள்
தற்போது கூடுதலாக 820 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடிசியா அரங்கில் ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்க முடியும்.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்று 2 ஆயிரத்து 835 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கோவையில் உள்ள மருத்துவமனை மற்றும் சிகிச்சை மையங்களில் 15 ஆயிரத்து 366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதித்தவர்களுக்கு கோவையில் மொத்தம் 8 சிறப்பு சிகிச்சை மையங்களிலும், 62 தனியார் மருத்துவமனைகளிலும், 10 தனியார் தங்கும் விடுதிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கொரோனா சிகிச்சை மையங்களான இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் கொடிசியா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகளை பார்வையிட்டனர். நோயாளிகளிடம் சிகிச்சை முறை மற்றும் உணவுகள் குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். மருத்துவ வசதிகள் தொடர்பாக மருத்துவர்களிடமும் கேட்டறிந்தனர்.
கொரோனா சிகிச்சை மையமான கொடிசியாவில் 676 படுக்கை வசதிகள் உள்ளது. தற்போது கூடுதலாக 820 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கொடிசியா அரங்கில் ஒரே நேரத்தில் 1500 க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையளிக்க முடியும். இதேபோல இஎஸ்ஐ மருத்துவமனையில் 830 படுக்கை வசதிகள் உள்ள நிலையில், கூடுதலாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் சக்கரபாணி, ”கோவையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கொடிசியாவில் 2 அரங்குகளில் 676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூடுதலாக 3 அரங்குகளில் 820 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 1500 க்கும் மேற்பட்டோருக்கு இங்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கோவையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்ட மக்களும் சிகிச்சைக்காக கோவைக்கு வருகின்றனர். அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகராக உள்ள கோவையில், முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகிறது. தொழிற்நகரமாக இருப்பதால் கொரோனாவால் ஏற்படும் பாதிப்பு பல வகைகளில் தமிழகத்தை பாதிக்கும். எனவே கோவை போன்ற பெருநகரங்களில் இன்று சென்னையில் நிலவுவதை போன்ற அசாதாரண சூழல் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு ஆகியவற்றையும் அடிக்கடி உறுதிசெய்ய வேண்டும் என்று கோவைவாசிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த காலங்களில் அதிகாரிகள் காட்டிய அலட்சியத்தை தவிர்த்து, அமைச்சர்களின் ஆய்வுக்கு பிறகாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.