மேலும் அறிய
எம்.ஜி.ஆர்., தொலைநோக்கு பார்வை, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது... மதுரையில் குட்டி மெரினா !
ரூ.50 கோடியில் மதுரை வண்டியூர் கண்மாய் ‘குட்டி மெரினா’ கடற்கரைபோல் புணரமைப்பு : முதல்வர் திறந்து வைத்த பூங்கா, குட்டி மெரினா போல் மாறிவருகிறது.

வண்டியூர் பூங்கா மதுரை
Source : whatsapp
மதுரை வண்டியூர் கண்மாய் ‘குட்டி மெரினா’ கடற்கரைபோல் மாற்றப்பட்டு, மக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்தி வருகின்றனர்.
எம்.ஜி.ஆரின் கனவு
1982-ம் ஆண்டில் மதுரையில் நடந்த உலக தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி படகு போக்குவரத்துடன் கூடிய சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு பல்வேறு பிரச்னையால் முழு வடிமடையாமல் இருந்தது. தற்போது அவரின் அந்த தொலைநோக்கு அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. பணிகள் முழுமையடைந்து திறந்து வைக்கப்பட்டு, மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். கண்மாயைச் சுற்றிலும் 3.2 கி.மீ. தூர நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது. கண்மாயின் மையத்தில் சிறிய தீவு உருவாக்கப்பட்டு, அங்கு பொதுமக்கள் மிதக்கும் ரப்பர் பாலம் வழியாக நடந்து சென்றும், படகு சவாரி சென்றும் கண்மாயின் அழகை ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரத்தியேக நுழைவுவாயில்
அதற்காக கண்மாயில் தேங்கி நிற்கும் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றப்பட்டு, தண்ணீரை சுத்தம் செய்யும் பணிகள் நடைப்பெற்றது. இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள உடற்பயிற்சிக் கூடம், பெரியவர்களுக்கு யோகா மண்டபம் அமைக்கப்படுகின்றன. நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. குழந்தைகள் ஸ்கேட்டிங், சைக்கிளிங் செல்வதற்கு தனி டிராக்குகளும், அவர்கள் விளையாடுவதற்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களுடன் சிறு விளையாட்டு அரங்கும் உருவாக்கப்பட்டுள்ளது. கண்மாய் கரைகளிலும், நடைபயிற்சி பாதைகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. வண்டியூர் பூங்காவுக்கு பழம் மார்க்கெட் எதிர்புறம், சுந்தரம் பூங்கா பழைய நுழைவு வாயில் ஆகிய இடங்களில் 2 பிரதான நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இவ்வாயில்கள் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மாநகராட்சி அதிகாரிகள் வந்து செல்வதற்காக கே.கே.நகர் என்ஃபீல்டு ஷோரூம், ஹோண்டா ஷோரூம் ஆகிய 2 இடங்களில் மேலும் 2 பிரத்யேக நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் கண்மாயின் கிழக்குப் பகுதியில் பாண்டி கோயில் சுற்றுச்சாலையில் ஒரு அலங்கார வளைவுடன் (ஆர்ச்) கூடிய திறந்தவெளி நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாகவும் பொதுமக்கள் பூங்காவுக்கு வந்து செல்லலாம். கார், இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு லேக் வியூ சாலையிலும், சுற்றுச்சாலையில் பாண்டி கோயில் அருகிலும் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை வண்டியூர் கண்மாய் ‘குட்டி மெரினா’ கடற்கரைபோல் மாற்றப்பட்டு பணிகள் நிறைவடைந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ஆம் தேதி திறந்து வைத்தார். தற்போது இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த பூங்காவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி பணிகளை முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























