Omicron in Chennai: ஒருவரிடமிருந்து 94 பேருக்கு பரவல்... சென்னையில் ‛ஹை ஸ்பீடு’ காட்டும் ஓமிக்ரான்!
சென்னையில் ஒருவர் மூலம் 94 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோருக்கு ஒமிக்ரான் அறிகுறி தீவிரமாக உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ்(Omicron Virus) தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த டிசம்பர் 13ஆம் தேதி நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதல்முறையாக ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டத்தை பொது வெளியில் செய்ய வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேண்டுகோளும் வைத்திருந்தார். மேலும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக டிசம்பர் 31ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஒன்றுகூடினால் நிச்சயம் தொற்று பரவல் இன்னும் வீரியமாக மாறும் என மருத்துவர்கள் எச்சரித்திருப்பதால் 31ஆம் தேதி இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 17ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அவருக்கு எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். முடிவில் அவருக்கு கொரோனா உறுதியானது. அதுமட்டுமின்றி அவருக்கு எஸ்.ஜீன் என்ற ஒமிக்ரான் அறிகுறியும் இருந்தது.
இதனால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலிகள், உடன் சிகிச்சை பெற்றவர்கள் என மொத்தம் 3,965 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் நேற்று மாலைவரை 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 94 பேரில் 64 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களது மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் நேற்று ஒருநாள் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 619ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 194 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை, 2 குழந்தைகளுக்கு தாய்... அம்மாவிலிருந்து அப்பாவான திருநம்பி!
மயிலாடுதுறை : ஆறுதல்.. புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று பதிவாகவில்லை..
புதுச்சேரியில் புகுந்த ஒமிக்ரான் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை