புதுச்சேரியில் புகுந்த ஒமிக்ரான் - புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை
’’புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தலாமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து அரசிடம் தெரிவிப்போம்'’
புதுச்சேரியில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதாக பெங்களூரில் இருந்து ஆய்வு முடிவுகள் வந்துள்ளன. கிட்டத்தட்ட பரிசோதனைக்கு அனுப்பி 20 நாட்களுக்கு பிறகே இம்முடிவுகள் வந்துள்ளசூழலில் தொற்று பாதித்தோர் நலமாக உள்ளனர். உலகம் முழுவதும் உருமாறிய கொரோன ஒமிக்ரான் வைரஸாக பரவி வருகிறது. அதிவேகமாக ஒமிக்ரான் பரவக்கூடியது என்பதால் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்துள்ளனர். ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி தரப்பட்டு ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் புதுவையில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- புதுச்சேரியில் நகரப் பகுதியான காமராஜர் சிலையொட்டி உள்ள பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கும், லாஸ்பேட்டையில் 20 வயது பெண்ணுக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதியாக பெங்களூரில் இருந்து ஆய்வக அறிக்கை வந்துள்ளது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் கரோனா தொற்றுக்காக பரிசோதனைக்கு இவர்கள் வந்தபோது ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்தோம். அதில் குறிப்பிட்ட அறிகுறி உள்ளோரின் ஆய்வறிக்கையை பெங்களூருக்கு அனுப்புவோம். அதன்படி தற்போது இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகி வந்துள்ளது. இதில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். அதேபோல் இளம்பெண்ணும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு குணமடைந்துள்ளார். இருவரும் தற்போது நலமாக இருக்கின்றனர்.
இவர்கள் வெளிநாடு செல்லவில்லை. அவர்களிடம் தொடர்பில் இருந்தோருக்கும் அப்போதே கரோனா பரிசோதனை செய்து அவர்களுக்கு நெகட்டிவ் முடிவுகள் வந்தன. அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. டிசம்பரில் இதுவரை ஒமிக்ரான் உள்ளதா என்பதை அறிய 90 பரிசோதனை ஆய்வு அறிக்கைகளை பெங்களூர் அனுப்பியுள்ளோம். இன்னும் பல முடிவுகள் வரவேண்டியுள்ளது. ஊரில் இருந்தோருக்கே ஒமிக்ரான் வந்துள்ளதால், எங்கள் கருத்துப்படி ஒமிக்ரான் நிறைய இருக்க வாய்ப்புள்ளது.
ஒமிக்ரான் தொற்றுக்கு உடல்வலி, சோர்வு ஆகியவைதான் அறிகுறிகளாகும். அவ்வாறு இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளலாம். இது அதிகம் பாதிப்பு ஏற்படுத்தாது. புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தலாமா என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்து அரசிடம் தெரிவிப்போம். ஒமிக்ரான் வார்டு, மார்பக நோய் மருத்துவமனையில் உள்ளது. அங்கு 180 படுக்கைகள் வசதிகள் உள்ளன. மொத்தமாக 600 படுக்கைகள் தயாராக உள்ளன. மருந்துகள், ஆக்சிஜன் வசதியும் தயாராக உள்ளது. முககவசம் அணியாமல் இருக்காதீர்கள். சமூக இடைவெளி கடைபிடியுங்கள். அவசியமின்றி வெளியில் வராதீர்கள் என்று குறிப்பிட்டார்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )