வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்... தியாக அத்தியாயங்களைத் வீரத்தால் எழுதிய முன்னோடிகள்-முதலமைச்சர்
வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து நேற்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!
வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும்!’ இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலுநாச்சியார்
கி.பி.1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 -ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பிரிட்டிஷ் ராணுவதளபதி பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது வீரர்களுடன் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் வீரமரணம் அடைந்து விட்டார். வேலுநாச்சியார், முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல் அருகே விருப்பாட்சி விரைந்தார். இராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களுடன் இணைந்து புதிய படையணியை கட்டி எழுப்பினார். வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.
வீரபாண்டிய கட்டபொம்மன்
தனது 30வது வயதில் வீரபாண்டிய கட்டபொம்மன் அரியணை ஏறினார். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய தளபதி ஆலன்துரையிடம் வரி கட்ட மறுத்த நிலையில், ஜாக்சன்துரையை களமிறக்கியது ஆங்கிலேயப் படை. ஆரம்பத்தில் ஜாக்சன் துரையுடன் நட்புறவாக சென்ற வீரபாண்டிய கட்டபொம்மன், ராமநாதபுரம் அரண்மையில் ஜாக்சன் துரையை வீரபாண்டியன் தமது சகோதரர்களுடன் சந்தித்தார். ஆனால் ஜாக்சன் துரை, வீரபாண்டிய கட்டபொம்மனை கைது செய்ய உத்தரவிட்டதால், இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் சகோதரர்களுடன் தப்பினார்.
இதன் பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுடன் பானர்மேன் ஆங்கிலேய படை யுத்தம் நடத்தியது. இந்த யுத்த காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி தானதிபதி ஆங்கிலேயரிடம் சிக்கி தூக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனும் அவரது சகோதரர்களும் அடைக்கலம் தேடி தமிழ் குறுநில மன்னர்களின் அரண்மனைகளுக்கு சென்று உதவி கேட்டு அடைக்கலம் புகுந்தனர். அங்கு அவர் காட்டிக் கொடுக்கப்பட்டதால், புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் அரண்மனையில் ஆங்கிலேயர் படையால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். பின்னர் கி.பி. 1799-ம் ஆண்டு அக்டோபர் 5-ந் தேதி கயத்தாறு என்ற இடத்தில் புளியமரத்தில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன்