Aringar anna : மாநில சுயாட்சியின் மங்கா ஒளிவிளக்கு பேரறிஞர் அண்ணா!
பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும், சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? - அறிஞர் அண்ணா

பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக்காப்பது, அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர்...
இனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்.. தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் அழிந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டும் என்று விரும்பியவர்..
அதிகம் பேரால் பேசப்படும் இந்திதான் இந்த நாட்டின் தேசிய மொழி என்று டெல்லி அறிவிக்க முயன்ற போதெல்லாம் தடைக்கல்லாய் திகழ்ந்தவர்.. பெரும்பான்மைக்குத்தான் முதன்மை என்றால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள எலியை தேசிய விலங்காக அறிவிக்காமல் புலியை அறிவித்தது ஏன் என்று வினா எழுப்பியவர்.. காக்காயை தேசிய பறவையாக அறிவிக்காமல் மயிலை அறிவித்தது ஏன் என்றும் கேட்டவர்..
இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும் உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டு அதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்தவர்..
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் நாசமே மிஞ்சும் என்று எச்சரித்த தீர்க்கதரிசி..
தமிழினத்தின் மாண்பு மங்கிப்போய்விடக்கூடாது என்று மாநில சுயாட்சியை வற்புறுத்தி அதற்கான உரிமை களை மீட்க போராடியவர்.. அதனால்தான் இன்று தமிழகம் பல விதங்களில் முன்னேறியிருக்கிறது..
மாநில சுயாட்சி அதிகாரத்தை கோட்டை விட்டதால்தான் இன்னும் பல மாநிலங்களை மத்திய அரசு தன் கோரக்கரத்தால் அடக்கியாண்டு கொண்டிருக்கிறது. அதிலும் வடகிழக்கு மாநிலங்களின் கதை இன்னமும் பரிதாபம். அவ்வளவு ஏன், நம்ம புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அருகில் உள்ள திண்டிவனத்திலும் கடலூரிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலமே இருக்காது..ஆனால் புதுச்சேரியில் பலமாக இருக்கும்..
தமிழகத்தில் பெரிய இயக்கங்களாக திகழும் திமுகவும் அதிமுகவும் புதுச்சேரியில் மட்டும் மூச்சு வாங்குவது ஏன்? ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.. ஒரு கான்ஸ்ட்டபிளைக்கூட புதுச்சேரி முதலமைச்சரால் ஒன்றும் செய்துவிடமுடியாது..எல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம்..
மத்தியஅரசு போடும் நிதியை பொறுத்தே புதுச்சேரிக்கு நிதியாதாரம்.. இப்படியிருக்கும்போது எவன் மாநில கட்சிகளை நம்பி போவான்..
இந்த கண்றாவிகளையெல்லாம் பார்க்கும்போதுதான் மாநில சுயாட்சியை வலியுறுத்தி பல விஷங்களில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்த அண்ணாவின் பெருமை புரியவரும்.. மிட்டா மிராசுகளும் பண்ணையார்களும் அமர்ந்த பீடங்களில் சாமான்ய மக்களும் அமரும் வகையில் அரசியலை செதுக்கிய அற்புதமான சிற்பி அண்ணா..
தமிழினத்தின் பெருமையை உயிர் மூச்சாக சுவாசித்ததால்தான் எதையும் துணிச்சலுடன் பல சம்பிரதாயங்களை அவரால் உடைக்கமுடிந்தது.
அண்ணா முதலமைச்சர் பதவியேற்க அவரது நுங்கம்பாக்கம் வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ரெடியாகிறார். நம்மையும் அழைத்துச் செல்வார் என்று மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் தயாராக இருக்கின்றனர். ஆனால் அண்ணாவோ, யாரையும் அழைக்காமல் ஒரு பழைய கைத்தறி துண்டை தோளில் போட்டுக்கொண்டு
காரில் ஏறி, பதவியேற்புக்கு புறப்பட்டு போய்விடுகிறார்
முதலமைச்சர்கள் பதவியேற்பதை அந்த அரங்கில் உள்ளவர்கள் மட்டுமே அன்றைக்கு கேட்கமுடியும்- ஆனால் அண்ணா முதலமைச்சராக பதவியேற்கும்போது, ''விழா அரங்கின் வெளியே கட்டுங்கடா ஒலிபெருக்கிகளை. என் பதவி பிரமாணத்தை என் சமான்ய மக்களும் கேட்கட்டும்'' என்று உத்தரவு போட்டார்.
அண்ணாவின் மீது உயிரையே வைத்திருந்து அவர் பெயரிலேயே தனி இயக்கம், கொடி கண்ட எம்ஜிஆர் இதை மனதில்வைத்தே தாம் முதலமைச்சராக முதன் முதலில் பதவியேற்றபோது மக்கள் முன்னிலையிலேயே அதனை செய்துகாட்டினார்..
இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழின் குரல்வளையை கடித்து குதறிவிடும் என்று தீர்க்கமாக நம்பியவர் அண்ணா. அதனால்தான் இந்தி திணிப்பை விரட்டி விரட்டி வேட்டையாடச் சொன்னார். இந்தியா முழுக்க பள்ளிகளில் இங்லீஷ் கற்பிக்கப்படும்போது அது ஏன் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது? உலகத்தொடர்புக்காக இங்கிலீஷையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்?
பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும் சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? பெரிய கதவை வைத்துவிட்டால் அதில் சிறிய நாயும் பெரிய நாயும் வந்துபோகப்போகின்றன என்று சொன்னவர் அறிஞர் அண்ணா...
தன்னுடன் இருந்தவர்கள் பிரிந்து போய் எதிர் அரசியல் செய்ய ஆரம்பித்த போதும் கூட அவர்களின் தனித்திறமையை கேவலப்படுத்தாமல் நாகரிகமாக" மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்றார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவை எதிர்கொண்ட போது ""நீங்கள் கட்டிமுடிக்கப்பட்ட கோட்டை நான் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்" என்று தன்னடக்கத்தோடு போரிட்டவர்.
மதராஸ் மாகாணம் என்று இருந்ததை தமிழ்நாடு என பெயர் சூட்டி பிறந்த மண்ணையே அழகுபடுத்தியவர்.
அண்ணா... இது வெறும் பெயரல்ல.. ஒரு சரித்திரம், படிக்க, படிக்க, கேட்க கேட்க வியக்கவைக்கும் ஒரு சாமான்யனின் மகத்தான வரலாறு..
காஞ்சிபுரத்தில் ஒரு எளிய நெசவாளி குடும்பத்தில் பிறந்தவர். நகராட்சியில் எழுத்தர் வேலை பார்த்தவர். இந்த சாமான்யன்தான் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்கினார். அதுவும் யாரை எதிர்த்து? நாட்டுக்கே சுதந்திரம் வாங்கித் தந்தோம் என்று சொல்லி நாடு முழுவதும் அரசியல் ஆதிக்கம் செலுத்திவந்த காங்கிரசுக்கு எதிராக..
பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்கள் கோலேச்சிய காலகட்டத்தில், அவர் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தபோது, ஏதோ வேலைவெட்டி இல்லாத நாலு படிச்ச பசங்களையும் கூத்தாடிகளையும் வெச்சிகிட்டு கட்சி ஆரம்பிக்கிறான் ஒருத்தன் என கேலி பேசியவர்கள் ஏராளம்.
1957ல் தனது தம்பிமார்களோடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முதன் முறையாக சந்தித்தபோது அண்ணாவின் இயக்கத்திற்கு வெற்றி கிடைத்தது வெறும் பதினைந்தே இடங்களில்.. என்னடா தனிநாடே கேட்டு கட்சி ஆரம்பிச்சீங்க, கடைசில 15க்கே முக்கிட்டீங்க என்று மறுபடியும் கேலி.
காஞ்சித்தலைவன் அசருவானா?
1962 அடுத்த தேர்தல்.. ஃப்பிட்டீன் ஃபிப்டியாகியது. அதாவது 15 என்பது 50 ஆகி எதிர்கட்சி அந்தஸ்தை பிடித்தது. அண்ணாவின் அரசியல் எதிரிகள் சாதாரண வில்லன்கள் அல்ல. கடவுள் பக்தியையும் விலைபேசி வியாபாரமாக்கும் தந்திரத்திலும வல்லவர்கள். பெருமாள் படத்தின் மீது ரூபாய் நோட்டுக்களை வைத்து சத்தியம் வாங்கி பாமர மக்களின் வறுமையை பேரம்பேசி அண்ணாவையே தோற்கடித்தவர்கள்.
அப்போதும் கலங்கவில்லை, காஞ்சி கோமகன். அடுத்த 1967 சட்டமன்ற தேர்தலில் தனது இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் ஏறவே வைத்துவிட்டார்.
இந்திய அரசியல் வரலாற்றில், காங்கிரசை வீழ்த்தி ஒரு மாநில கட்சி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை அமைத்தது என்றால் அது அண்ணா தலைமையிலான திமுகதான்.
ஒரு நெசவாளி குடும்பத்து சாமான்யன் ஒட்டு மொத்த நாட்டையும் வியப்பால் மூச்சடைக்கவைத்த மெய்சிலிர்க்கவைத்த தருணம் அது. சுதந்திர வரலாறு கொண்ட காங்கிரசை, ஜனநாயகத்தில் ஒரு மாநில கட்சியாலும் வீழ்த்தமுடியும் என்று நாட்டின் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியவர் அண்ணா.
குரு சிஷ்யன் மோதலில், சிஷ்யன் அண்ணாவையே தேர்தலில் தோற்கடிக்க 1967 தேர்தலில் பம்பரமாய் சுழன்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். ஆனாலும், வெற்றிபெற்ற பின்பு பெரியாரை தேடிப்போய் அவர் காலில் ஆட்சியை அர்ப்பணம் செய்த பண்பாளர் அண்ணா. அரசியலில் விரோதம் இருந்தாலும் தனது கட்சியின் தலைவர் இடத்தை குருநாதன் பெரியாருக்காகவே காலியாக வைத்திருந்து மானசீக மரியாதை செலுத்தியவர் பேரறிஞர்.
.
''நாங்கள் சொல்லளவில்தான்.. ஆனால் அண்ணாதுரையோ அதை சாதித்தே காட்டியவர்'' என்று குருநாதர் பெரியாரே பாராட்டும் அளவிற்கு தன்னை வடிவமைத்துக் கொண்டவர்..
எவனும் எவனுக்கும் அடிமையில்லை என்ற சித்தாந்தத்தில் சாமானிய மக்களுக்கும் கல்வி அரசு வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று சொல்லி சாதித்தும் காட்டியவர். இன்று அவரைப் பார்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எள்ளி நகையாடுவோருக்கெல்லாம் அரசியல் பாதையை எப்படி போட வேண்டும் என்று இவரே பாடமாக அமைந்து போனார்..
இந்த மாநிலத்தை அவர் ஆண்டது ஒன்றரை ஆண்டு மட்டுமே.. ஆனால் அரை நூற்றாண்டை கடந்த பிறகும் அவரின் தாக்கமே ஆட்சிக் கட்டிலில் தொடர்கிறது..
மாநில சுயாட்சியின் மங்கா ஒளிவிளக்கு பேரறிஞர் அண்ணா..
அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் அவர் இருக்கும்போதே பிறந்த. அவர், படித்த பள்ளியிலே படித்த, அவர் விளையாடிய தெருவெல்லாம் இன்றும் எங்கள் கால் பதியும் எங்களை போன்றோருக்கு அண்ணா என்ற ஒரு சொல் போதும், உற்சாகம் பெருக்கெடுத்து ஒட....!
கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

