என்னாது அமைச்சரோட பொண்ணுக்கே பாதுகாப்பு இல்லையா? என்னதான் நடக்குது இங்க?
மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சர் ரக்சா காட்சேவின் மகளை பொது இடத்தில் வைத்து சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். மத்திய அமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லையா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

பெண்கள்/சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய இணை அமைச்சர் ரக்சா காட்சேவின் மகளை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லையா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அமைச்சரின் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்:
பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி, கொல்கத்தா என முக்கிய நகரங்களில் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
கடந்த வாரம், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பாஜகவின் இளம் தலைவர்களில் ஒருவரும் மத்திய விளையாட்டுத்துறை இணை அமைச்சருமான ரக்சா காட்சேவின் மகளை பொது இடத்தில் வைத்து சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர். இதையடுத்து, பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றுள்ளார்.
என்னதான் நடக்கிறது?
காவல் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரக்சா காட்சே, "ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அன்று கோத்தாலியில் ஒரு யாத்திரை ஏற்பாடு செய்யப்படும். நேற்று முன்தினம் என் மகள் இந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, சில சிறார்களால் அவர் துன்புறுத்தப்பட்டார். எனவே, நான் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்திருக்கிறேன். நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாக அல்ல, நீதி கேட்கும் தாயாக வந்துள்ளேன்" என்றார்.
இதுதொடர்பாக முக்தைநகர் துணை காவல் கண்காணிப்பாளர் குஷாநாத் பிங்டே கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டனர். மத்திய அமைச்சரின் மகளுடன் சென்றிருந்த மெய்க்காப்பாளர்களுடன் அவர்கள் மோதினர். இந்த வழக்கில் ஏழு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எந்த வித அரசியல் அழுத்தமும் தரப்படவில்லை. பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகளின் வீடியோக்களை குற்றம் சாட்டப்பட்டவர்கள் எடுத்துள்ளனர். ஐடி சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன" என்றார்.

