அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க அழுத்தம் கொடுத்தார்களா..? - இபிஎஸ் சொல்வது என்ன..?
அண்ணாமலையை மாற்ற வேண்டுமென்று அதிமுக எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்திவிட்டது. களத்தில் நின்று வெற்றிக்காக பணியாற்றப் போவது தொண்டர்கள்தான். அவர்களால்தான் ஒரு கட்சி வெற்றி பெற முடியும். தொண்டர்களின் உணர்வை கடந்த செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. இது அதிமுகவில் உள்ள அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமையும். இதில் இடம்பெறும் கட்சிகள் குறித்து விரைவில் தெரிவிப்போம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாது. அதை தேர்தலுக்குப் பின்னரே உறுதியாக சொல்லமுடியும். கடந்த தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாக்கு வித்தியாசத்தில் தான் அதிமுக திமுகவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதேபோன்று 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும் ஒரு லட்சத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் 10 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. 100 சதவீதம் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக உறுதியாக வெற்றி பெறும்வாய்ப்புள்ளது. கடந்த இரண்டரை மாத திமுக ஆட்சி, மிக மோசமாக மக்கள் விரோதமாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகளில் வெறும் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி விட்டு 95 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதம் வரை உயர்ந்துள்ளது. வீட்டு வரி, குடிநீர் வரி 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. மக்கள் வாழ்க்கை நடத்துவதே சிரமமாக உள்ளது. அதிமுக வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை மிக மிக சாதகமாக உள்ளது" என்று கூறினார்.
மேலும், "தென்னை விவசாயிகளின் கோரிக்கையை சொல்வதற்காகவே கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மத்திய நிதி அமைச்சரை சந்தித்தனர். 6 மாதம் முன்பே இதுகுறித்து நிதி அமைச்சரை அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் சந்தித்து பேசியுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே கோவை வந்தபோதும் சந்தித்து பேசியுள்ளார். விவசாயிகளின் பிரதிநிதியாக, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை சொல்வதற்காகவே இந்த சந்திப்பு நடந்தது. அரசியலுக்காகவோ, கூட்டணிக்காகவோ சந்திக்கவில்லை. கூட்டணி குறித்த முடிவில் உறுதியாக உள்ளோம். திமுக பங்கேற்றுள்ள இந்தியா கூட்டணியில் தான் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தொகுதிகளை பங்கிட விரும்பவில்லை. மத்திய பிரதேச தேர்தலுக்கு ஆம் ஆத்மி வேட்பாளர்களை தனியே அறிவித்து விட்டது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் கம்யூனிஸ்ட்டுகள் என பொருந்தா கூட்டணியாகவே இந்தியா கூட்டணி உள்ளது .
டெல்டா சாகுபடிக்கு எவ்வளவு தண்ணீர் கிடைக்கும் என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே முதல்வர் ஸ்டாலின் அவசரமாக மேட்டூர் அணையை திறந்துவிட்டார். தற்போது மேட்டூர் அணையில் 3 நாட்களுக்குத் தேவையான நீர் மட்டுமே இருக்கிறது. முதல்வரை நம்பி 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். ஏற்கனவே 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்த பயிர்கள் கருகிவிட்டன. மற்ற இடங்களிலும் பயிர்கள் கருகி வருகின்றன. வேதனையில் உள்ள விவசாயிகளை முதலமைச்சர் இதுவரை நேரில் சென்று கூட பார்க்கவில்லை. உண்மையில் விவசாயிகள் மீது அக்கறை இருந்திருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்கு வழங்க வேண்டிய நீரை கேட்டு பெற்றிருக்கலாம். இந்தியா கூட்டணிக்கு வர ஆம் ஆத்மி கெஜ்ரிவால் நிபந்தனை விதித்தது போல, காவிரி நீரை விடுவிக்க நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடமாவது முறையிட்டு இருக்கலாம். அதையும் அவர் செய்யவில்லை. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வரும் நிலையில் நமக்கு உரிமையான நீரை பெற்றுத் தர அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்திற்குத்தான் அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற மட்டுமே கூட்டணி அமைத்துள்ளார். கிராம சபைக் கூட்டத்தில் விவசாயி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக வேண்டும் என பாஜக மத்திய தலைவர்கள் யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களின் மனதை காயப்படுத்திவிட்டது. தொண்டர்களின் உணர்வை மதிக்கும் அளவில் தான் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. பிரதமர் மோடி, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாரதிய ஜனதாக் கட்சி தேசியத் தலைவர் நட்டா ஆகிய தேசியத் தலைவர்கள் யாரும் நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து எங்களிடம் பேசவில்லை. பாரதிய ஜனதா தேசியத் தலைவர்கள் அதிக எண்ணிக்கையிலான சீட்டுகளை கேட்டதாக பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தவறானவை. அப்படி ஏதும் நடக்கவில்லை. அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அதேபோல பாரதிய ஜனதாக் கட்சி மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று அதிமுக எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. அதிமுக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிக்கும் என்றார். பிஜேபி கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் அதிமுக சின்னம் முடக்கப்படும் என்று வருகிற தகவல் தவறானது. அப்படி ஏதும் கிடையாது. இது தேவையற்ற அரசியல் விமர்சனங்கள். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் சின்னத்தை வழங்கியுள்ளது. உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கையை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.