விஜயின் தளபதியா அல்லது தலைவலியா ? புஸ்ஸி ஆனந்த் செயலால் அதிருப்தி.. கண்டிப்பாரா விஜய் ?
" புஸ்ஸி ஆனந்த் காலில் தொடர்ந்து நிர்வாகிகள் விழுந்த வீடியோ வெளியாகிய நிலையில், நடிகர் தாடி பாலாஜி புஸ்ஸி ஆனந்த் காலில் விழும் வீடியோவும் வெளியாகியுள்ளது "
நடிகர் விஜய் தென் இந்திய திரையுலகை தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தெரிந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். சுமார் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து, உச்சநட்சத்திரமான விஜயின் கால்ஷீட்டை பெற தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர். இப்படி தமிழ் திரையுலகின் உச்சாணிக் கொம்பில் இருக்கும் சூழலில் தான், அதனை விட்டு முழுவதுமாக விலகி தனது அரசியல் பயணத்தை விஜய் தொடங்கியுள்ளார்.
அதிரடியாக அரசியலுக்கு வந்த விஜய்
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்குவதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலே தங்களது இலக்கு எனவும் விஜய் அறிவித்தார். அடுத்தடுத்து கட்சிக் கொடி, கட்சிக்கான பாடலையும் வெளியிட்டார். இந்நிலையில் தான், வரும் 27ம் தேதி தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழக மாநாடு
மேலும் நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார். தொடர்ந்து விஜய் தினமும் மாநாடு வேலைகள் எப்படி நடக்கிறது, என்பது குறித்த அப்டேட்களையும் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜயின் தளபதி புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் அகில இந்திய பொதுச் செயலாளராக உள்ள புஸ்ஸி ஆனந்த் விஜயன் முக்கிய தளபதிகளின் ஒருவராக இருக்கிறார். தலைமை கழகத்தின் பல்வேறு நிர்வாகிகள் இருந்தாலும், விஜய்க்கு நெருக்கமானவரும் , விஜயின் அணுகக்கூடிய ஒருவராக புஸ்ஸி ஆனந்த் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது, மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, மன்ற வேலைகளை கவனிப்பது என அனைத்து வேலைகளையும் புஸ்ஸி ஆனந்த் கவனித்து வந்தார்.
அதிகார மையமாக உருவெடுத்த புஸ்ஸி ஆனந்த்
மாவட்டத்திலிருந்து ஒவ்வொரு நிர்வாகிகளின் நியமிப்பது அவர்களிடம், விஜய்யின் உத்தரவுகளை கொண்டு செல்வது புஸ்ஸி ஆனந்தின் முதன்மை வேலையாக இருந்து வந்தது.புஸ்ஸி ஆனந்த் தலைமை பதவிக்கு வந்த பிறகு, விஜய்க்கு நேரடியாக எந்த மாவட்டம் நிர்வாகிகளும், பெரிய அளவில் தொடர்பு இருந்தது கிடையாது. இதை பயன்படுத்திக் கொண்ட புஸ்ஸி ஆனந்த் தன்னை அதிகார மையமாக மாற்றிக் கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புஸ்ஸி ஆனந்த் அதிகார மையமாம மாறியதால் பல்வேறு மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உருவாகி உள்ளது. தற்போதும் சில மாவட்டங்களில் ஒரே பதவியில், இருவர் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 10 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு முதல் ஆண்டு விஜய் பரிசு வழங்கிய போது, பல்வேறு தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நிர்வாகிகள் அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சனை தற்போது, அதிகரிக்க தொடங்கி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரச்சனைகள் என்ன ?
புஸ்ஸி ஆனந்த் அதிகார மையமாக மாற்றிக்கொள்ள பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டதாக, அதிருப்தி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சில நிர்வாகிகளை பதவி வேண்டும் என்பதற்காக, புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து பதவியை பெற்று வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். புஸ்ஸி ஆனந்த் தேவையில்லாமல் காலில் விழும் கலாச்சாரத்தை கொண்டு வருவதாகவும், மூத்த நிர்வாகிகள் புலம்பி தீர்த்து வருகின்றனர்.
விஜய்க்காக இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாகவும் ஒரு சில நிர்வாகிகள் வேதனை தெரிவிக்கின்றனர். காலில் விழுவதை புஸ்ஸி ஆனந்த் ஊக்குவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் கூட நடிகர் தாடி பாலாஜி கட்சியில் இணைந்த போது காலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது .
இதுபோன்ற வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளிவருவதால், பிற நிர்வாகிகளும் காலில் விழ வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாக ஒரு சில நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சிலர் தங்களுக்கு பதவி கிடைக்க வேண்டும் என விருப்பப்பட்டு காலில், விழவும் தயாராக இருப்பதாகவும் ஒரு தரப்பு குற்றச்சாட்டை கிளப்பியுள்ளது. விஜய்க்கு உண்மையான தளபதியாக புஸ்ஸி ஆனந்த் இருக்கிறாரா ? அல்லது ஆனந்தால் விஜய்க்கு தலைவலி அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.