இலங்கை அதிபர் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் வாக்குப்பதிவு - தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிதிநிலையில் உள்ள இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆவார்.
இலங்கை அதிபர் தேர்தல்:
கடந்த 2019ஆம் ஆண்டு பெரும்பான்மை பலத்துடன் கோத்தயபய ராஜபக்சா அதிபரானார். ஆனால், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால், 2022ம் அண்டு உள்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. கோத்தபய ராஜபக்சா நாட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து, விக்கிரமசிங்க அதிபராக பொறுப்பேற்று அமைதியை மீட்டெடுத்தார். சில கடினமான முடிவுகளை எடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவினார். இந்த சூழலில் தான், அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இன்று காலை தொடங்கி இலங்கை அதிபர் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு தேர்தலில் பல்வேறு சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தவிர, இரண்டு பெரிய கூட்டணிகளான SJB (சமகி ஜன பலவேகயா) மற்றும் NPP (தேசிய மக்கள் சக்தி) ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன.
மூன்று பேருக்கு இடையே கடும் போட்டி:
இதில் 5 பேர் முக்கிய வேட்பாளர்களாக கருதப்பட்டாலும், 3 பேருக்கு இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. 75 வயதான ரணில் விக்கிரமசிங்க 6 முறை பிரதமராக பதவி வகித்தவர். அவரது கட்சி நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே கொண்டுள்ளது.
இருப்பினும், ராஜபக்சே கட்சியின் ஆதரவுடன் அதிபரான பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக பொருளாதாரத்தை சரியான பாதையில் அழைத்து சென்று வருவதாகவும், நிலையான ஆட்சியை தருவதாக கூறி தேர்தலை சந்திக்கிறார் ரணில் விக்கிரமசிங்க.
57 வயதான எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் மகனுமான சஜித் பிரேமதாச, 2020ஆம் ஆண்டு விக்கிரமசிங்கவின் UNP யில் இருந்து பிரிந்த சமகி ஜன பலவேகய அல்லது SJBக்கு தலைமை தாங்குகிறார். பொருளாதார பிரச்னைகளுக்கு முடிவு கட்டுவதாகவும் நல்ல மாற்றத்தை தருவதாகக் கூறி தேர்தலை சந்திக்கிறார் சஜித் பிரேமதாச.
55 வயதான அனுர குமார திசாநாயக, நாடாளுமன்றத்தில் வெறும் மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளார். ஊழல் எதிர்ப்பு மற்றும் ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை பேசி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் தேசிய மக்கள் சக்தி அல்லது NPP கூட்டணியின் கீழ் போட்டியிடுகிறார்.
தமிழர்கள் ஆதரவு யாருக்கு?
இலங்கை பூர்விக தமிழர்கள், மலையகத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி தமிழர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள் என இலங்கை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இருப்பார்கள். எனவே, இவர்கள் வாக்குகள் சிதறுவது, ஜே.வி.பி-யின் அனுர குமாரா திஸநாயகவுக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இதற்கு முன்பெல்லாம், தமிழர்களின் வாக்குகள் குறிப்பாக சிறுபான்மையினர் வாக்குகள் ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு பெரும்பான்மையாகச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. அது இம்முறை இருக்குமா என்பது தெளிவற்று இருக்கிறது என்பதே கள நிலவரம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

