ஸ்டாலினுக்கு முழு ஆதரவு! தமிழக முதல்வருடன் கைகோர்த்த KTR.. இதான் விஷயமா?
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர் பேசுபொருளாகி வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்வதில் முழுமையாக உடன்படுவதாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் முழுவதும் பாதிக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தெலங்கானாவில் இருந்து அவருக்கு ஆதரவுக்குரல் வந்துள்ளது. ஸ்டாலின் சொல்வதில் முழுமையாக உடன்படுவதாக தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி. ராமாராவ் தெரிவித்துள்ளார். குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை முறையாக செயல்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
ஸ்டாலினுடன் கைக்கோர்த்த கே.டி.ஆர்:
தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான இடங்களின் எண்ணிக்கையையும் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் செயல்முறையைக் குறிக்கிறது. கடந்த 1951, 1961 மற்றும் 1971 மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவில் மொத்தம் மூன்று முறை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும், அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெறுவதைத் தடுக்க, குடும்ப கட்டுப்பாட்டு திட்டங்களை ஊக்குவிப்பதற்காக 1971ஆம் ஆண்டுக்கு பிறகு, தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை.
வரும் 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கான தொகுதிகளின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறுசீரமைப்பு, தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரச்னையை கிளப்பும் தொகுதி மறுசீரமைப்பு:
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பேசியிருந்தார். "தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டைப் பற்றியது மட்டுமல்ல, இது தென்னிந்தியா முழுவதையும் பாதிக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கு வழிவகுத்து, தேசிய முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த மாநிலங்களை ஒரு ஜனநாயக செயல்முறை தண்டிக்கக்கூடாது. உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சமமான அணுகுமுறை நமக்குத் தேவை" என ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஸ்டாலினின் கருத்துக்கு தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சி.ஆரின் மகனும் முன்னாள் அமைச்சருமான கே.டி. ராமாராவ் ஆதரவு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "ஸ்டாலினுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். மேலும், இந்த விஷயத்தில் அவரை முற்றிலும் ஆதரிக்கிறேன். தேசத்திற்கு மிகவும் தேவைப்படும்போது, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டங்களை முறையாகசெயல்படுத்தியதற்காக தென் மாநிலங்களை நீங்கள் தண்டிக்க முடியாது.
தென் மாநிலங்களின் முயற்சிகளைக் கருத்தில் கொள்ளாமல் தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவது ஜனநாயகம், கூட்டாட்சி உணர்வில் இல்லை. தொகுதி மறுசீரமைப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வமாக இருந்தால், தேசத்திற்கு நிதி பங்களிப்புகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை நான் முன்மொழிகிறேன்.
தேசியக் கட்டுமானத்தில் தெலுங்கானா மற்றும் தென் மாநிலங்களின் பங்களிப்பை யாரும் புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, நாட்டின் மக்கள் தொகையில் தெலங்கானா 2.8% மட்டுமே இருந்தாலும், அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2% க்கும் அதிகமாக பங்களிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

