மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்கள்... வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு இறங்கிய அன்புமணி!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் கடந்த நவம்பர் 11 -ஆம் தேதி அதீத கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தவுடன், பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்கி சேதமடைந்தது. இந்நிலையில் மழை பாதித்த பகுதிகளை கடந்த 14 -ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தல ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டு தற்போது வழங்கப்படுகிறது. ஆனால் குடியிருப்புகள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்த அவரை மயிலாடுதுறை பாட்டாளி மக்கள் கட்சியினர் வரவேற்றனர். தொடர்ந்து ஆச்சாள்புரம், குதிரை குத்தி, வேட்டங்குடி, நெய்தவாசல் பகுதிகளில் மழை பாதித்த நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
"கன மழையால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய், குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மழைக் காலங்களில் மட்டுமே வாய்க்கால்கள், வடிகால்களை தூர் வாருகின்றனர். அதனால்தான் இத்தகைய வெள்ளப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. கோடைக் காலங்களில் தூர்வாரி வாய்க்கால்கள், வடிகால்களை அகலப்படுத்த வேண்டும். தற்போதைய கன மழையால் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முழுமையாக வழங்கப்பட வேண்டும். அரசும், அதிகாரிகளும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதிகாரிகள் பாரபட்சமின்றி உண்மையாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும். 575 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை உடனையாக செயல்படுத்தி தடுப்பணையை விரைவாக கட்டி முடிக்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாப்பதற்கன திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பிரதமரின் கிஸான் திட்டம் தொடங்கிய ஆண்டில் 11 கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் 3 தவணைகளாக கொடுக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு 3 கோடியே 70 லட்சமாக விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும். நிதி இல்லையா? கணக்கெடுப்பு சரியாக இல்லையா? ஊழல் நடந்துள்ளதா என தெரிவிக்க வேண்டும்.
வெலிங்டன் ஏரி 120 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப் போவதாக அறிவித்துள்ளனர். முழுத் தொகையும் எவ்வித முறைகேடுமின்றி தூர் வாரும் பணிக்காக பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் கடுமையான போராட்டம் நடத்தப்படும். 2026 -ல் பாமக தலைமையில் தமிழகத்தில் ஆட்சியமைப்போம். அதற்கேற்ற வியூகங்களை 2024 பாராளுமன்ற தேர்தலில் அமைப்போம்" என்றார்.
மேலும் வெள்ள பாதித்து தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர் வந்து சென்ற சூழலில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக கூறும் தாங்கள் காலதாமதம் வந்து பார்வையிட்டுள்ளது குறித்த கேள்விக்கு, "மற்ற கட்சியினர் ஆண்டுகளுக்கு ஒரு முறை பச்சை துண்டு அணிந்து வந்து, வெள்ள நேரத்தில் கடமைக்காக வந்து செல்கின்றனர். ஆனால் நான் அப்படியல்ல, மாதம் ஒருமுறை வெள்ளம், வறட்சி, ஏற்படும்போதெல்லாம் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளேன். அதுதான் எங்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.