’புதுச்சேரியில் அரசு ஆதரவோடு நடக்கும் நில அபகரிப்பு’- சிபிஐ விசாரிக்க நாராயணசாமி கோரிக்கை
'’முதல்வர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளை சில எம்.எல்.ஏக்களும் வியாபாரிகளும் தொடர்பு கொண்டு விசாரணையை தொடர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்’’
புதுச்சேரியில் போலி பத்திரங்கள் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில்,
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி வந்த பிறகு நிலம் அபகரிப்பு, வீடுகள் அபகரிப்பு, போலி பத்திரங்கள் தயார் செய்து அதன்மூலம் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களை அபகரிக்கும் வேலை நடந்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் புதுச்சேரியில் வீடு, மனைகள் வைத்திருப்பவர்களின் இடங்களை கண்டுபிடித்து, அதற்கு போலியாக பத்திரம் தயார் செய்து 20க்கும் மேற்பட்ட பத்திரங்களை தயாரித்துள்ளார்கள்.
இதில் அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்களும் சில வியாபாரிகளும் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். சில அரசியல்வாதிகளுக்கும் இது போன்ற பத்திரங்கள் தயார் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை காவல்துறை செய்து வருகிறது.
இந்தப் புகாரின் அடிப்படையில் 10 பத்திரங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 10 பத்திரங்கள் தயார் செய்து 50 கோடி மதிப்பிலான சொத்துகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனை காவல்துறை விசாரிக்கும் போது, முதல்வர் அலுவலகத்தில் இருந்து காவல்துறை அதிகாரிகளை சில எம்.எல்.ஏக்களும் வியாபாரிகளும் தொடர்பு கொண்டு விசாரணையை தொடர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியுள்ளனர்.
போலி பத்திரங்கள், முத்திரைகள் தயாரித்தவர்கள், போலி கையெழுத்து போட்டவர்களின் பெயர்கள் எங்களிடம் உள்ளன. இதில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற விவரமும் வந்துள்ளது. புதுச்சேரியில் பல கொலைகளை செய்து சிறையில் அடைக்கப் பட்டவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இது மிகப் பெரிய நிலஅபகரிப்பு ஊழல். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினால் மந்தமாக விசாரணை நடைபெறும். குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்புகள் ஏற்படும்.
எனவே, குற்றவாளிகளை பிடிப்பதற்கு இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கை சிபிஐ எடுத்து நடத்தக் கோரி நான் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுவேன்.
புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், அங்கு முதலீடு செய்துள்ளவர்களை ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்புகள் புதுச்சேரியில் எதுவும் இல்லை. இதனை கண்காணிக்க வேண்டும். இது போன்ற நிதி நிறுவனங்களுக்கு விதிமுறைகளை வகுத்து அதனை கடை பிடிக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அவற்றை முடக்க வேண்டும். மேலும், பணத்தை இழந்த மக்களுக்கு அதனை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையும் அரசு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’