''வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி..'' ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்புக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு
புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள வடதெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“ டெல்டா மாவட்டங்கள் சோலைவனமாக்கப்பட வேண்டும் என்று, அதனை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கும் பொருட்டு, வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் புதியதாக ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணிகளை தடுக்கும் சட்டமாகும்.
இந்த நிலையில், காவிரி வடிநிலப் பகுதியில் அமைந்துள்ள வடதெரு பகுதியில் புதியதாக ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது.
மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருப்பது தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது என்றும், இந்த அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிடுமாறு பிரதமரை வலியுறுத்தியுள்ளார். இதை அ.தி.மு.க. வரவேற்கிறது.
அதேசமயத்தில் அந்த கடிதத்தில் எதிர்காலத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலாவது ஹைட்ரோகார்பன் இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டுமென்றால் அல்லது ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டுமென்றால் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது ஏற்கக்கூடியது அல்ல.
இந்த வேண்டுகோள் தமிழக விவசாயிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல். டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் இந்த வேண்டுகோள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்திற்கு எதிரானது.
டெல்டா அல்லாத மாவட்டங்களைப் பொருத்தவரையில் வம்பை விலை கொடுத்து வாங்கும் முயற்சி. தமிழகத்திற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தேவையில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக இல்லையோ என்ற அச்சத்தை இந்த வேண்டுகோள் பொதுமக்களிடமும், விவசாயிகளிடமும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, முதல்வர் வருகிற 17-ந் தேதி பிரதமரை நேரில் சந்திக்கும்போது, விவசாயிகள் நலன் காக்கும் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் சட்டத்தில் உள்ள கூறுகள் குறித்தும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் கடிதம் குறித்தும், சட்டப்படி தமிழக அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, புதியதாக புதுக்கோட்டை, வடதெரு பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.