புதுச்சேரி அரசியலில் திடீர் பூகம்பம்: பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ரங்கசாமி!
NDA உடன் கூட்டணியை தொடர்வதாக கடந்த மாதமே அறிவித்துவிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, “புதிய கட்சிகளுக்கு கூட்டணியில் இடமில்லை” என இப்போது போட்டிருக்கும் திடீர் நிபந்தனை...

புதுச்சேரி: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதுச்சேரி அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணி ஆகிய இரண்டு தரப்பிலுமே தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ப்பதில் பெரும் இழுபறி நீடித்து வருகிறது.
ரங்கசாமியின் நிபந்தனையும் பாஜகவின் தவிப்பும்
புதுச்சேரி முதல்வர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கடந்த மாதமே தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்திருந்தார். ஆனால், தற்போது அவர் விதித்துள்ள ஒரு 'திடீர் நிபந்தனை' பாஜக தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
"புதிய கட்சிகளுக்குக் கூட்டணியில் இடமில்லை" என்பதே அந்த நிபந்தனை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தெந்தக் கட்சிகள் கூட்டணியில் இருந்தனவோ, அவை மட்டுமே தொடர வேண்டும் என்பதில் ரங்கசாமி உறுதியாக இருக்கிறார்.
அதிமுக மற்றும் லஜக-வின் நிலை
இந்த நிபந்தனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது அதிமுக தான். தாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக அதிமுக கூறி வரும் வேளையில், ரங்கசாமியின் பிடிவாதத்தால் பாஜகவால் அதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. இதன் விளைவாக, பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நடத்தும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு அதிமுக அழைக்கப்படுவதில்லை.
அதேபோல், லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தொடங்கியுள்ள லோக் ஜனசக்தி கட்சி (லஜக)-யும் என்டிஏ கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், ரங்கசாமியின் "புதியவர்களுக்கு இடமில்லை" என்ற நிலைப்பாட்டால் இவர்களின் வருகையும் கேள்விக்குறியாகியுள்ளது.
இழுபறியில் தொகுதிப் பங்கீடு
பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச பலமுறை முயன்றும், முதல்வர் ரங்கசாமி பிடிகொடுக்காமல் தவிர்த்து வருகிறார். இதனால், தேர்தல் பணிகள் முடங்கியுள்ளன. வழக்கமாகவே ரங்கசாமி பேச்சுவார்த்தைகளை கடைசி நிமிடம் வரை இழுத்தடிப்பார் என்றும், இந்த முறையும் அதையே அவர் பின்பற்றுவதாகவும் கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'இந்தியா' கூட்டணியிலும் குழப்பம்: திமுக - காங்கிரஸ் மோதல்
மறுபுறம் எதிர்க்கட்சியான 'இந்தியா' கூட்டணியிலும் சூழல் சுமுகமாக இல்லை. புதுச்சேரியில் யார் பெரிய அண்ணன்? என்பதில் திமுகவிற்கும் காங்கிரஸிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. புதுச்சேரி காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "தமிழகத்தில் திமுகவிற்காக காங்கிரஸ் குறைவான தொகுதிகளை ஏற்றுக்கொண்டது போல, புதுச்சேரியில் திமுக விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 8 தொகுதிகளைத் தவிர்த்து, மீதமுள்ள 22 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்பது காங்கிரஸின் திட்டம். காங்கிரஸின் இந்தத் திட்டத்தை திமுக ஏற்கவில்லை. இதனால் காங்கிரஸ் அழைத்த பேச்சுவார்த்தைக் கூட்டங்களைப் புறக்கணித்து வருகிறது.
டெல்லிக்கு விரைந்த காங்கிரஸ்
இந்த முட்டுக்கட்டையை உடைக்க புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்கள் தற்போது டெல்லிக்கு விரைந்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் பேசி, திமுகவுடனான இந்தப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆளும் கூட்டணியில் ரங்கசாமியின் பிடிவாதமும், எதிர்க்கட்சிக் கூட்டணியில் திமுக - காங்கிரஸ் இடையேயான 'ஈகோ' யுத்தமும் புதுச்சேரி அரசியலை ஒரு நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தால் மட்டுமே தேர்தல் களம் சூடுபிடிக்கும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















