Fact Check: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு குறித்து இனவெறிக் கருத்துகளை தெரிவித்தாரா பிரதமர் மோடி? உண்மை இதுதான்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கறுப்பாக உள்ளதால் 'தோற்கடிக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மோடி கூறுவது போல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் சூழலில், இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
பரவும் தகவல் என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 15 வினாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் உள்ள கறுப்பினத்தவர் அனைவரும் "ஆப்பிரிக்கர்கள்" என பிரதமர் குறிப்பிட்டதாகவும் கறுப்பாக உள்ளதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 'தோற்கடிக்கப்பட வேண்டும்' என்று அவர் கூறியதாகவும் அந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
"கறுப்பாக உள்ளவர்கள் அனைவரும் ஆப்பிரிக்கர்கள். திரௌபதி முர்முவும் ஆப்பிரிக்கர். அதனால்தான் அவரைப் போன்று கறுப்பாக உள்ளவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்" என பிரதமர் பேசுவது போல் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தகவல் பொய்யானது. தவறான பொருள்படும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா பற்றி பிரதமர் மோடி கூறியவற்றை எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
வைரலாகும் வீடியோவை ஆராய்ந்ததில், இந்த மாதம் 8ஆம் தேதி, தெலங்கானாவின் வாரங்கலில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஒரு பகுதி எடிட் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. முழு உரையும் பாரதிய ஜனதா கட்சியின் யூடியூப் சேனலில் உள்ளது.
எடிட் செய்யப்படாத முழு நீள வீடியோவை பார்த்ததில், காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துகளை மேற்கோள் காட்டி விமர்சித்தார்.
உண்மையான வீடியோவை 43 நிமிடங்கள் 51 வினாடிகளில் இருந்து கேட்கையில், பிரதமர் பின்வருமாறு பேசுகிறார், "இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் வசிக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டேன்.
இளவரசருக்கு (ராகுல் காந்தி) தத்துவவாதியாகவும் வழிகாட்டியாகவும் அவரது மாமா இருக்கிறார். கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவர் இருப்பது போல், குழப்பமான நேரங்களில் அவரின் ஆலோசனைகளை பெறுகிறார். நிச்சயமற்ற நிலையில் இந்த மூன்றாம் தரப்பினரிடம் இளவரசர் ஆலோசனை பெறுகிறார்.
ஒரு முக்கியமான கருத்தை இந்த தத்துவஞானி, வழிகாட்டி மாமா கூறி இருக்கிறார். கறுப்பாக இருப்பவர்களை ஆப்பிரிக்கர்கள் என்று அவர் குறிப்பிடுகிறார். இது தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இழிவான கருத்தாகும்.
கறுப்பாக இருப்பதால், திரௌபதி முர்முவை ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று அவர்கள் ஊகிக்கிறார்கள் என்பதை இந்த வெளிப்பாடு எனக்கு உணர்த்தியது. இதன் விளைவாக, அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன்" என்றார்.
வீடியோவில் 44:40 முதல் 44:47 வரையிலான உரையையும் 45:12 முதல் 45:22 வரையிலான உரையையும் ஒன்றாக எடிட் செய்து தவறான தகவலாக பகிரப்படுகிறது.
கடந்த 8 ஆம் தேதி தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது பிட்ரோடா சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இந்தியாவின் பன்முகத்தன்மையை பாராட்டி பேசிய அவர், "கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் இருக்கும் இந்தியாவைப் போல பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்" என்றார்.
இந்த கருத்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலகினார். கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, சாம் பிட்ரோடாவை விமர்சித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்துகள் எடிட் செய்யப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
தீர்ப்பு என்ன?
தெலங்கானா மாநிலம் வாரங்கலில் இந்தியப் பிரதமர் மோடி தனது உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு எதிராக இனவெறிக் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுவது தவறானது. சாம் பிட்ரோடா மீதான மோடியின் விமர்சனத்தை தவறான பொருள்படும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கூற்று தவறானது என சொல்லி கொள்கிறோம்.
பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக Logically Facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தியை சற்றே திருத்தி எழுதியுள்ளது.