மயிலாடுதுறை மாவட்டத்தில் முகாமிட்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர்!
கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் அதில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய தொடங்கியது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதீத கனமழைபெய்யுது வரும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, அக்டோபர் 16 -ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், , விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. அதேபோன்று புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நிலவரம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் இன்று காலை மணி வரை மிதமான மழையானது பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியில் இருந்து இன்று காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மயிலாடுதுறையில் மாவட்டத்தில் சராசரியாக 9.83 மில்லிமீட்டர் மழையானது பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 5 மிமீ, மணல்மேடு 2 மிமீ, சீர்காழி 7.60 மிமீ, கொள்ளிடம் 40.20 மிமீ, தரங்கம்பாடி 1 மிமீ,செம்பனார்கோவில் 3.20 மிமீ என மொத்தம் மாவட்ட முழுவதும் பரவலாக 59.00 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 7.60 மிமீ மழையும், குறைந்த அளவாக தரங்கம்பாடியில் 1.00 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் தொடர்ந்து பெரும் மழை பொழிவு இல்லாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்படவில்லை. மழையின் அளவு குறைவாக உள்ள போதிலும், மாவட்டத்திலுள்ள 28 கடலோர மீனவர் கிராமங்களில் மிதமான காற்று வீசுவது உடன், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக அனைத்து கிராம மீனவர்களும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள கடலுக்கு செல்லாத விசைப்படகுகள், பைபர் படகுகள் முகத்துவாரங்கள் மற்றும் மீன்பிடி துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.
பேரிடர் மீட்புப் படை முகாம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் தொடர் மழை மற்றும் புயலால் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து மக்களை பாதுகாக்க அரக்கோணத்தில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர். இவர்கள் பாதுகாப்பு உபகரணங்களான ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான உபகரணங்களுடன் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் பதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு இங்கிருந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.