ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் - காரணம் இதுதான்
சேலம், திருச்சி ரயில்களில் பெட்டிகள் குறைப்பு மற்றும் ரயில் பயணிகளின் பல்வேறு பிரச்னைகளை தீர்க்காத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சேலம், திருச்சி ரயில்களில் பெட்டிகள் குறைப்பு மற்றும் ரயில் பயணிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாத ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, மயிலாடுதுறையில் ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெமூ ரயிலாக மாற்றம்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஜங்ஷனில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 6.20 மணிக்கு சேலம் செல்லும் ரயில் அண்மையில் மெமூ ரயிலாக மாற்றப்பட்டு, 8 பெட்டிகளுடன் இயங்கப்பட்டு வருகிறது. 282 கிலோமீட்டர் தொலை உள்ள சேலத்துக்கு செல்லும் ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டதுடன், அதில் கழிப்பறை வசதியும் கூட குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் பயணிகள் இது தொடர்பாக தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
பெட்டிகள் குறைப்பு
இந்நிலையில், வருகின்ற ஜூலை 30-ம் தேதி முதல் மயிலாடுதுறையில் இருந்து காலை 8.05 மணிக்கு திருச்சி செல்லும் ரயில் மெமூ ரயிலாக மாற்றப்பட்டு, பெட்டிகள் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் ரயில்களில் பெட்டிகளை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் ரயில் பயணிகள் ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழுக்கும் எதிர்ப்பு
மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ். மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் சாமி. கணேசன், ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் எம்.என். ரவிச்சந்திரன், தமிழர் தேசிய முன்னணி மாவட்டத் தலைவர் பேராசிரியர் இரா. முரளிதரன், மாவட்ட வளர்ச்சிக்குழு செயலாளர் தமிழன் கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான ரயில் பயணிகள் கலந்துகொண்டு ரயிவே நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் எதிப்பை பதிவுசெய்தனர்.
வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், மயிலாடுதுறை- காரைக்குடி நேரடி ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும், பகல் நேரத்தில் சென்னை தாம்பரத்துக்கு தினசரி பயணிகள் ரயில் இயக்க வேண்டும், பரிந்துரை செய்யப்பட்ட பழனி ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும், சோழன் விரைவு ரயில் குத்தாலத்தில் நின்று செல்ல வேண்டும். மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை வழங்க வேண்டும், அம்ரித் பாரத் திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.