மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு குட் நியூஸ்.. புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது?
Mayiladuthurai Manakudi New Bus Stand: மயிலாடுதுறை அருகே மணக்குடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளதை அடுத்து விரைவில் திறக்கப்பட உள்ளது.

Mayiladuthurai New Bus Stand Manakudi: மயிலாடுதுறை அருகே மணக்குடியில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகள் முடியும் தருவாயில் உள்ளதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர்.
கடைசி 38வது மாவட்டம்
தமிழ்நாட்டின் கடைசியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட 38வது மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இந்த மாவட்டம் கடந்த 2021 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக இரா.லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு துறையாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரித்து தற்போது முழுமையாக இங்கு செயல்பட்டு வருகிறது.

புதிய ஆட்சியர் அலுவலகம்
இந்நிலையில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் வணிக வரி வளாக கட்டிடத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வேறு கட்டிடத்திலும் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை புதிய மாவட்டம் அறிவிப்பதற்கு முன்பாகவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான இடத்தினை தருமபுரம் ஆதீனம் வழங்குவதாக உறுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் பால்பண்ணை என்ற பகுதியில் உள்ள தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 23 ஹெக்டேர் இடத்தில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு, கட்டட வட்டம் திருச்சி சார்பில் 114 கோடி திட்ட மதிப்பீட்டில் 7 மாடி கட்டிடமாக உருவாகியது. அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.

புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
இதேபோன்று மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து மன்னம்பந்தல் ஊராட்சி பகுதியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதன் திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே கட்டப்படும் என அறிவித்தார். இதனிடையே ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மூன்றடுக்கு கொண்ட சுமார் 36,000 சதுர அடி பரப்பளவில் இந்த கட்டிடம் கட்டப்படவுள்ளது.

புதிய பேருந்து நிலைய கோரிக்கை
மயிலாடுதுறையில் 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட காமராஜா் பேருந்து நிலையம் உள்ளது. சுமாா் 3 ஏக்கா் பரப்பிலான இந்த பேருந்து நிலையத்தில் இடவசதியின்மை காரணமாக நகராட்சி பூங்காவில் புதிய பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, திருவாரூா், நாகை மாா்க்கத்தில் செல்லும் பேருந்துகள் வந்து செல்கின்றன. இதையடுத்து, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

24 கோடியில் புதிய பேருந்து நிலையம்
இதையடுத்து, மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13 ஏக்கா் இடத்தை நகராட்சி வாங்கியது. ஆனால், பிபிபி எனப்படும் தனியாா் பங்களிப்புடன் பேருந்து நிலையம் அமைக்க எந்த நிறுவனமும் முன்வராததால் அத்திட்டம் நிலுவையில் இருந்தது. இதையடுத்து, இந்நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடி கிராமத்தில் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2022 -ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றபட்டு, 2023 -ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் 2024 -ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரவேண்டிய பேருந்து நிலையம் இன்னும் நிறைவு பெறாமல் இழுத்தடித்து கொண்டே செல்கிறது.

விரைவில் திறப்பு விழா
24 கோடி மதிப்பீட்டில் 5,183 சதுர.மீ. பரப்பளவில் மயிலாடுதுறை நகராட்சி புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பேருந்து நிலையத்தில் 28 பேருந்துகள் நிற்கும் வகையிலும், 49 கடைகள், 10 பயணிகள் காத்திருக்கும் இடம், பொருட்கள் வைப்பறை-1, உணவகங்கள்-2, தாய்மார்கள் பாலூட்டும் அறை கள்-2, முன்பதிவு நிலையம்-1, நேரம் காப்பாளர்-2, காவல் துறை அறை - 1, கட்டுப்பாட்டு அறை - 1, நவீன வசதிகளுடன் கூடிய 32 இலவச கழிப்பறைகள், மாற்றுத்திறனாளிகள் கழிப்ப றைகள் 2 ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது, மேற்கூரை கான் கிரீட் மற்றும் அனைத்து கட்டட வேலைகளும் முடிவுற்று, பூச்சு வேலை, வண்ணப் பூச்சு வேலை நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்னும் ஒருசில மாதங்களில் இப்பேருந்து நிலையம் திறக்கப்படும் என அதிகாரிகள் மட்டத்தில் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






















