"சூறைக்காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை" தரைமட்டம் ஆன வாழை மரங்கள் - வேதனையில் விவசாயிகள்..!
சீர்காழி அருகே கனமழை மற்றும் சூறைக்காற்றால் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 2 லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட 2 லட்சம் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ள நிலையில் உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாட்டி வதைத்த வெயில்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்ட நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்பம் மிக மோசமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
Ramadoss Vs Anbumani : “திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி

வானிலை ஆய்வு மையம்
இந்நிலையில் நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மணிக்கு 30 - 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மேலும், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மயிலாடுதுறையில் கனமழை
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை நேற்றிரவு பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் சூறை காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இதே நிலை தான் ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலும் நேற்றிரவு பலத்த சூறை காற்றுடன் கனமழையானது பெய்தது.
விவசாயம் பாதிப்பு
இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவளாகம், காத்திருப்பு, செம்பதனிருப்பு, ராதாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் ஏற்பட்டுள்ளது. பத்து மாத பயிரான இந்த வாழை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது அடித்த பலத்த சூராவளி காற்று மற்றும் கனமழையால் வாழை முற்றிலும் அழிவை சந்தித்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கை
ஏக்கர் ஒன்றுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளதாகவும், மழையால் பாதித்த பகுதியை சம்பந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு உரிய கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதே போல பருத்தி செடி, மா மரங்கள், புளியமரம்கள் என சுமார் 200 ஏக்கர் அளவில் முறிந்து அழிவை சந்தித்துள்ளதால் அதற்கான நிவாரணமும் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீர்காழியில் 84.60 மில்லி மீட்டர் மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் 24.40 மில்லி மீட்டர், மணல்மேடில் 37.00 மில்லி மீட்டர், கொள்ளிடத்தில் 60.00 மில்லி மீட்டர், செம்பனார்கோயிலில் 34.80 மில்லி மீட்டர், மழையும் அதிகப்படியாக சீர்காழியில் 84.60 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக தரங்கம்பாடியில் 3.00 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மழையால் சூறைக்காற்றால் பல இடங்களில் மரங்கள் மின்கம்பங்களில் சாய்ந்து மின் வினியோகம் பலமணி நேரமாக தடைப்பட்டுள்ளது.






















