Ramadoss Vs Anbumani : “திமுக கூட்டணி – ராமதாஸ் ; அதிமுக கூட்டணி –அன்புமணி” அடம்பிடிக்கும் தந்தை – மகன்..!
"தன்னை பல கட்சிகள் கூட்டணிக்கு அழைப்பதுபோலவும், அதற்கு செல்லாமல் இருப்பதாகவும் தொடர்ந்து விசிக தலைவர் திருமா பேசி வருவதை திமுக தலைமை ரசிக்கவில்லையென தெரிகிறது”

வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்ற பெரும் போர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருக்கும் அக்கட்சி தலைவருக்கும் இடையே வெடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே, கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் வந்து நான், நீ என போட்டிப் போட தொடங்கியுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான முடிவுகளிலும் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
வன்னியர் மாநாடு
வரும் 11ஆம் தேதி மாமல்லபுரம் அருகே திருவிடந்தையில் வன்னியர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே தந்தை – மகன் சண்டையையும் கூட்டணி தொடர்பான ஒருமித்த கருத்தையும் முடிவுக்கு கொண்டுவருவார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
ராமதாஸ்க்கு திமுக கூட்டணி ஆசை
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் பங்கேற்ற பா.ம.க தருமபுரியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதனால் கடும் அதிருதியில் இருந்த ராமதாஸ், இனி அதிமுக – பாஜக கூட்டணி வேண்டாம் என்ற முடிவை கையிலெடுத்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தால்தால், குறிப்பிடத்தக்க எம்.எல்.ஏக்களை பெற்று திமுக ஆட்சியில் தங்களுக்கு தேவையான விஷயங்களை சாதித்துக்கொள்ள முடியும் என்று அவர் கணக்குப்போடுகிறார்.
அன்புமணிக்கு மத்திய அமைச்சர் ஆசை
ஆனால், பாமக தலைவர் அன்புமணியோ, தன்னுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், மீண்டும் எம்.பி. பதவியை பெற்று மத்திய பாஜக ஆட்சியில் அமைச்சராகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். அதனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் இணையவே அவர் விடாப்படியாக இருப்பதாக பாட்டளி சொந்தங்கள் பேசி வருகின்றனர்.
இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம்
இந்த விவகாரமும், கட்சி விவகாரமும், குடும்ப விவகாரமும் சேர்ந்து பாமக நிறுவனர் இரமதாசு மற்றும் கட்சி தலைவர் அன்புமணி இடையே பெரும் ஈகோ யுத்தமாக வெடித்துக் கிடக்கிறது. அதனை சரிசெய்ய பல நிர்வாகிகள் முயன்றாலும் ராமாதாஸ் அதற்கு உடன்பட்டு வருவதில்லை என்றும், இது தான் உருவாக்கிய கட்சி, தான் சொல்வதை கேட்டுதான் அனைவரும் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிகிறது.
அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் திருமா – அப்செட்டில் திமுக
திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தொடர்ந்து வெளிப்படையாகவே ஊடகங்கள், பொதுக்கூட்டங்கள் மூலம் திமுக மீதான தன்னுடைய அதிருப்தியை தெரிவித்து வருகிறார். அவர் ஒவ்வொரு முறை அப்படி பேசும்போதெல்லாம், அந்த விவகாரம் பெரிதுப்படுத்தப்பட்டு, ஊடகங்களில் விவாதப்பொருளாக மாறி, கூட்டணிக்குள் குழப்பம் என்பது மாதிரியான ஒரு பிம்பத்தை உருவாக்கி விடுகிறது. இப்படி திருமா பேசுவது திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருவதுடன், பிற சிறிய கூட்டணி கட்சிகளும் விசிக-வை பின்பற்றி பேசத் தொடங்கினால் நிலமை விபரீதமாகிடும் என்பதையும் திமுக தலைமை உணர்ந்திருப்பதால், இதனை சரி செய்ய திமுக தலைமை ஒரு முடிவை எடுக்கவிருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





















