அரசுப் பேருந்தில் நின்றபடி பயணித்து அலுவலகம் சென்ற மயிலாடுதுறை ஆட்சியர் - வியப்பில் பயணிகள்
பேருந்தில் டிக்கெட் எடுத்த மாவட்ட ஆட்சியர், பயணிகளிடம் என்ன காரணத்திற்காக பயணம் செய்கிறீர்கள் என்று கனிவாக கேட்டறிந்தார்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வீட்டிலிருந்து அரசு பேருந்தில் பயணித்தும், நடந்து வந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அலுவலகம் வந்தடைந்தார்.
வாகனங்கள் பெருக்கத்தால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்கள் என அனைவரும் மாதத்தில் ஒரு நாள் அவர்களுக்கான தனி வாகனத்தில் செல்லாமல் அரசு பேருந்திலும், நடைபயணமாகவும், சைக்கிளிலும் அலுவலகம் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தனது வீட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்று, அங்கு இருந்து அரசு பேருந்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். இதற்காக கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளி உள்ளிட்ட பல அதிகாரிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர்.
பேருந்தில் டிக்கெட் எடுத்த மாவட்ட ஆட்சியர், பயணிகளிடம் என்ன காரணத்திற்காக பயணம் செய்கிறீர்கள் என்று கனிவாக கேட்டறிந்தார். மகளிருக்கான விலையில்லா பேருந்து பயணத்திட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் இலவச பயணம் செய்தனர். பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நின்று கொண்டே பயணம் செய்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, கீழவீதி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்து, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார்.
BAFTA Awards 2024: ஃபப்டா திரைப்பட விழா.. 7 பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஓப்பன்ஹைமர்!
மாதத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், வாகனத்தை பயன்படுத்தாமல் பேருந்திலும், நடை பயணமாகவும் அலுவலகத்திற்கு சென்றால் வாகனத்தின் மூலம் ஏற்படும் புகை குறைவதால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும், எரிபொருள் சிக்கனமாகும் என்றும், அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வேண்டுகோள் விடுத்தார்.