(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Budget 2024: சென்னைக்கான பிரத்யேக வளர்ச்சித் திட்டங்கள் - பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்
TN Budget 2024: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டங்களுக்கு என 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், தலைநகர் சென்னைக்கு என பல்வேறு பிரத்யேக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வடசென்னை வளர்ச்சித் திட்டம்:
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, வடசென்னை வளர்ச்சிக்கு என 1000 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தார். இதன் மூலம், புதிய குடியிருப்புகள் கட்டித் தருவது, பள்ளிகளை திறன் மிகுந்தவையாக மேம்படுத்துவது, தொழிற்பயிற்சி மையங்களை அமைப்பது, ஏரிகள் சீரமைப்பு மற்றும் மருத்துவமனைகள் போன்றவை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கான பிரத்யேக திட்டங்கள்:
சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடையாறு நதி சீரமைப்பிற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், பூந்தமல்லியில் 500 கோடி ரூபாய் செலவில் அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும், சென்னை தீவுத்திடல் மேம்படுத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளும் தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
சென்னையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகள் அகலப்படுத்துவதற்காகக் கண்டறியப்பட்டுள்ளன. அதன் முதற்கட்டமாக, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில்ஸ் சாலை மற்றும் செம்பியம் ரெட்ஹில்ஸ் சாலைகளை 18 மீட்டராகவும், டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலைகளை 30.5 மீட்டராகவும் வளர்ச்சி உரிமைப் பரிமாற்ற (TDR) முறையில் அகலப்படுத்தும் திட்டம். சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னையை உருவாக்கும் நோக்கோடு சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய நகர்புரப் பொதுச் சதுக்கம், கண்காட்சி அரங்குகள், திறந்தவெளி திரையரங்கம் போன்ற நவீன சமூகக் கட்டமைப்பு வசதிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 104 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சென்னை கடற்கரையோரப் பகுதிகளை அழகுற சீரமைத்து மேம்படுத்திடும் நோக்கோடு கோவளம், எண்ணூர், பெசன்ட் நகர் ஆகிய கடற்கரைப் பகுதிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகளுடன் மெருகூட்டி அழகுபடுத்தப்படும்.
நகர்ப்புற பசுமைத் திட்டம்:
வானுயர்ந்த கட்டடங்கள் பெருகிவரும் பெருநகரப் பகுதிகளில் பூங்காக்கள் மட்டுமின்றி, பசுமை வெளிகளை அதிகரித்து இயற்கைச் சூழலை மேம்படுத்துவதன் மூலம், நகர்ப்புரங்களில் காற்று மாசுபடுவதையும் குறைத்திட இயலும். எனவே, சென்னை பெருநகர மாநகராட்சி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில்
பசுமைப் பரப்பை அதிகரிக்க வளர்ந்த மரங்கள் நடுவது, மியாவாக்கி காடுகள், பசுமைக்கூரைகள், செங்குத்துத் தோட்டங்கள், பசுமைச் சுரங்கப் பாதைகள், பசுமைத் திரைகள், நடைபாதைகளில் மரங்கள் அமைத்தல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இப்பணிகள் பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு, நகர்ப்புற பசுமைத் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.