(Source: ECI/ABP News/ABP Majha)
Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டத்தில் 8 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டப்படும் - பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு
Tamil Nadu Budget 2024: கலைஞர் கனவுத் திட்டம் என்ற பெயரில் ஏழைகளுக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2024: தமிழக அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
கலைஞர் கனவுத் திட்டம்:
அந்த உரையை வாசித்தபோது, “ஆழி சூழ் தமிழ் நிலபரப்பிற்குள் அழையா விருந்தினர்போல் அவ்வப்போது வருகை புரிந்து இன்னல்கள் பல கொடுத்திடும் இயற்கை பேரிடர் ஒரு புறம் என்றால், கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபுறம். இவற்றுக்கிடையில் நாம் இருக்கிறோம். 2030ம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை எட்டிடும் வகையில், கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் புதிய திட்டம் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசின் உதவித் தொகை அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் குடிசைகளில் வாழும் ஏழைகளுக்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் 8 லட்சம் கான்க்ரிட் விடுகள் கட்டித் தரப்படும். அடுத்த ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். ஒவ்வொரு வீடும் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என” அமைச்சர் தங்க தென்னரசு தெரிவித்துள்ளார்.
சாலை மேம்பாட்டு திட்டங்கள்:
- தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும் எளிதில் பெற்றுப் பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட, "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டில் 2,000 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டுப் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- தமிழ்நாட்டில் அனைத்து குக்கிராமங்களும் அடிப்படை வசதிகளைக் கொண்டு தன்னிறைவு பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.II இன் கீழ். 2024-25ஆம் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் 1,147 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக, 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும்.
- மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- 2024-25 ஆம் ஆண்டில், பல்வேறு திட்ட நிதிகளைத் திரட்டி நகர்ப்புர உள்ளாட்சிப் பகுதிகளில் 4,457 கி.மீ. நீளமுள்ள சாலைகள் 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
- இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
- அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.