சேலத்தில் பட்டப்பகலில் மனைவியின் கண்முன்னே கொடூர கொலை - காரணம் என்ன?
2019ல், டாஸ்மாக் கடையில் குட்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்த தூத்துக்குடியை சேர்ந்த இளைஞர் மனைவியின் கண்முன்னே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் காலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது மனைவியுடன் அருகில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது கடைக்குள் புகுந்த நபர்கள் பட்டப்பகலில் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பி ஓடினர்.
தூத்துக்குடியை சேர்ந்த வாலிபர் மதன் என்ற அப்பு. மதன் மீது தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்ற மதன், சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் நாள்தோறும் காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் மதன் கையெழுத்திட்டு வந்தார். கடந்த 10 ஆம் தேதியில் இருந்து அவர் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் தான் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை மதன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட வந்தார். மனைவியுடன் வந்திருந்த மதன், காவல் நிலையத்தில் கையெழுத்து இட்டுவிட்டு வெளியே வந்தார். இதையடுத்து சாப்பிடுவதற்காக காவல் நிலையம் அருகே உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட சென்றுள்ளார். மனைவியுடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் நுழைந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மதனை நோக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். நாலாபுறமும் சுற்றி நின்று வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் மதன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தன் கண் முன்னே கணவரை மர்ம நபர்கள் வெட்டி கொல்வதைப் பார்த்து அவரது மனைவி அச்சத்தில் கதறி அழுதார்.

இதையடுத்து அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். தொடர்ந்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலம் அஸ்தம்பட்டி போலீசார் உடனடியாக அங்கு வந்து விசாரணையை தொடங்கினர். இதேபோல் சேலம் மாவட்ட போலீசாரும் உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட துாத்துக்குடியை சேர்ந்த ஹரிபிரசாத், 26, ஜெயசூர்யா, 26, அந்தோணி, 24, சந்தோஷ், 22, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 2019ல், டாஸ்மாக் கடையில் குட்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதன்குமார் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்துள்ளார். அப்போது, எதிர் கோஷ்டியை சேர்ந்த ஹரிபிரசாத் தரப்பினர், கடந்த ஆண்டு மதன்குமாரை கொலை செய்ய திட்டமிட்ட நிலையில், கைவிரல்கள் மட்டும் வெட்டுப்பட்ட நிலையில் தப்பினார்.
அதன் பிறகு தான், வேறு ஒரு விவகாரத்தில், மரடோனாவை மதன்குமார் கொலை செய்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட சென்றுள்ளதை அறிந்த, ஹரிபிரசாத் கூட்டாளிகள், சேலம் வந்து நேற்று முன்தினம் வெட்டி சாய்த்துள்ளனர். கொலை வழக்கில் மேலும் இருவரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.





















