கொடைக்கானல் வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மரங்கள்...!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் அரசு அனுமதி இல்லாமல் தனியார் பட்டா காடுகளில் பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்கள் வெட்டி குவிக்கப்பட்டு உள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதி அதிகமான மரங்கள் நிறைந்த வனப் பகுதிகளாகும், இந்த வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒருபகுதியாகும், இந்த பகுதியில் அரிய வகை பறவை இனங்களும், வன விலங்குகளும் வாழ்ந்து வருகின்றன, வன விலங்குகளுக்கு சுழற்சி முறையில் உணவு கிடைப்பதற்கு அடர்ந்த வனப்பகுதி முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலை பகுதிகளில் மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட வன அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று மரங்களை வெட்ட வேண்டும். ஆனால் கடந்த 6 மாத காலமாக தனியார் பட்டா காடுகளில் மரங்கள் வெட்டுவதற்கு வனத்துறையினர் தற்போது வரை அனுமதி அளிக்காத நிலையில், கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான மூலையாறு, பண்ணைக்காடு, வாழைகிரி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பல லட்சம் மதிப்புள்ள வேங்கை, குமிழ், பலா, நாவல் உள்ளிட்ட மரங்களை வனத்துறை அனுமதி இல்லாமல் வெட்டி ஆங்காங்கே குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர்.
மேலும் நள்ளிரவு நேரங்களில் வெட்டிய மரங்களை லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது, இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரங்களில் மரங்கள் கடத்துவதற்கு வன பாதுகாவலர், வன காவலர் உதவியுடன் மரம் கடத்தலில் ஈடுபடுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றன. மரங்கள் அதிகம் வெட்டப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதாகவும், வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் இடம் பெயரும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி அரசு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக மரங்களை வெட்டி கடத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. கொடைக்கானல் வனப்பகுதிகளை மரங்களை வெட்டி சட்டவிரோதமாக கடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சட்டவிரோதமாக வெட்டப்படும் மரங்கள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண்களையும் வனத்துறை அறிவித்து விளம்பரப்படுத்த வேண்டும் எனவும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
வேலைக்கு சேர வேண்டுமென்றால் இன்னும் பணம் செலுத்த வேண்டும் என்று சிறுக , சிறுக 16லட்சம் வரை பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை கொடுத்தது அம்பலம் செய்தி பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் மோசடி செய்த டெல்லியை சேர்ந்த 3 பேர் கைது