கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மீண்டும் உயிர்பெறும் மலை நெல் சாகுபடி - உயிர்கொடுக்கும் இளைய தலைமுறை
’’மலை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை பயன்படுத்தி தங்களது முன்னோர்கள் தங்களது 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாக கூறுகின்றனர்’’
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை உள்ளிட்ட கிராமங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மலை கிராம மக்கள் மலை நெல் சாகுபடியை பிரதான தொழிலாக பல ஏக்கர் பரப்பளவில் செய்து வந்துள்ளனர். அறுவடை செய்த மலை நெல்லையே தங்களது உணவுத் தேவைகளுக்கும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால் மலைநெல் விவசாயம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே சிறிதுசிறிதாக கைவிடப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அழிவின் விளிம்பிற்கே சென்றுவிட்டதாக மேல்மலை கிராம மக்கள் கூறுகின்றனர். மலை நெல் விதைத்த காலத்தில் இருந்து ஒன்பது மாதங்கள் கழித்துதான் அறுவடை செய்யமுடியும், அதனால் இந்த மலை நெல் சாகுபடியை செய்வதில்லை எனவும் கூறுகின்றனர். விவசாயத்திற்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுவதனாலும் அறுவடைக்கு மிக காலதாமதம் ஏற்படுவதாலும் இந்த மலை நெல் விவசாயத்தில் மலை கிராம விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அழிந்துவரும் இந்த மலை நெல் விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தற்போது அப்பகுதியில் உள்ள இளைய தலைமுறை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர், மலை நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் எனவும் அதிக சத்துக்கள் நிறைந்து இருந்ததால் இந்த அரிசியை முன்னோர்கள் தங்களது முக்கிய உணவாக பயன்படுத்தியதால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் காலம் காலமாக சடங்கு சம்பிரதாயம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு இந்த மலை நெல்லை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது மலை நெல் விவசாயத்தை மீட்டெடுக்க முதற்கட்டமாக மன்னவனூர் கிராமத்தில் உள்ள கும்பூர் வயலில் 10 சென்ட் நிலத்தில் மட்டும் பயிரிடப்பட்டுள்ளது, மலை நெல்லுக்கு இயற்கை உரமான மாட்டின் சாணத்தை மட்டுமே உரமாக பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
இந்த மலை நெல்மணிகள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் இந்த மலை நெல் சாகுபடியை அதிகரிக்கும் விதமாகவும், மலை நெல்லை உற்பத்தி செய்து மக்களிடம் கொண்டு சேர்த்து ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் இந்த மலை நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாக மேல்மலை இளையதலைமுறை விவசாயிகள் கூறுகின்றனர். மேலும் மலை நெல் அறுவடைக்கு ஒரு மாதம் காலம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.