Supreme Court: உச்சநீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை..கொலிஜியம் எடுத்த அதிரடி முடிவு.!
தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வெங்கடநாராயணா பத்தி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் அமைப்பே உயர் நீதிமன்றத்திற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது.
உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை:
கொலிஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே சுமூகமான சூழல் நிலவவில்லை.
நீதிபதிகள் நியமன விவகாரத்தில், கொலிஜியம் பரிந்துரை செய்த நீதிபதிகளை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாக உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
கொலிஜியம் எடுத்த அதிரடி முடிவு:
இந்த நிலையில், தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். வெங்கடநாராயணா பத்தி ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான பி.ஆர். கவாய் மற்றும் சூர்ய காந்த் ஆகிய நீதிபதிகள் கொலிஜியம் அமைப்பில் இடம்பெற்றதை தொடர்ந்து முதல்முறையாக நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலிஜியத்தில் சஞ்சய் கிஷண் கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
யார் அந்த இருவர்?
தற்போது, உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள உஜ்ஜல் புயான், குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு ஜூன் 28ஆம் தேதி முதல் தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார்.
அதேபோல, வெங்கடநாராயணா பத்தியை பொறுத்தவரையில், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக கடந்த 2013ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தை தாய் உயர் நீதிமன்றமாக கொண்டவர் உச்ச நீதிபதியாக பதவியேற்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு, கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, இந்த ஜூன் மாதம் முதல் அதன் தலைமை நீதிபதியாக பதவியேற்று வருகிறார்.
தற்போது, உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். நீதிபதி கிருஷ்ண முராரி, நாளை மறுநாள் ஓய்வு பெறுவதை தொடர்ந்து, நீதிபதிகள் காலிபணியிடங்கள் மேலும் அதிகரிக்க உள்ளது.